ஹாத்ரஸ் சம்பவம்: விசாரணை அறிக்கையில் போலே பாபா பெயர் இல்லை
ஹாத்ரஸ் சம்பவம்: விசாரணை அறிக்கையில் போலே பாபா பெயர் இல்லை
ஹாத்ரஸ் சம்பவம்: விசாரணை அறிக்கையில் போலே பாபா பெயர் இல்லை
UPDATED : ஜூலை 09, 2024 03:41 PM
ADDED : ஜூலை 09, 2024 11:05 AM

லக்னோ: உ.பி., மாநிலம் ஹாத்ரஸில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு விவகாரத்தின் பின்னணியில் பெரிய சதி இருக்க வாய்ப்பு உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு கூறியுள்ளது. அதேநேரத்தில், இந்த அறிக்கையில் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை.
உ.பி.,யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. சுராஜ்பால் என்கிற போலே பாபா என்பவர் இந்த சொற்பொழிவில் பங்கேற்று பேசினார்.
இதில்,80 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 2.50 லட்சம் பேர் திரண்டனர். சாமியார் புறப்படும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி அடிபட்டும், மிதிபட்டும், மூச்சு திணறியும் 121 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்தது.
ஏடிஜிபி அனுபம் குல்ஷ்ரேஷ்தா மற்றும் அலிகார்க் கமிஷனர் சைத்ரா ஆகியோர் தலைமையிலான குழுவினர், 128 சாட்சிகள், சொற்பொழிவு நிகழ்ச்சியில் பணியில் இருந்த போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குமூலம் பெற்று, 855 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில் ,ஹாத்ரஸ் சம்பவத்தின் பின்னணியில் பெரிய சதி உள்ளதை மறுக்க முடியாது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். கூட்ட நெரிசலுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு. உள்ளூர் நிர்வாகம், போலீசார் இந்நிகழ்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர் எனக் கூறப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்யாமலேயே அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். நிகழ்ச்சி நடந்த போது பொது மக்கள் வெளியேற போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய தகவல்களை வழங்காமல் அனுமதி பெற்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஏற்பாட்டாளர்கள் தடுத்து உள்ளனர் எனக்கூறியுள்ளனர்.
அதேநேரத்தில், இந்த அறிக்கையில் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை. இந்த அறிக்கை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்த உள்ளார்.