Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ புகைச்சலை கிளப்பிய பாரத மாதா படம் கேரள முதல்வர் மவுனம் காப்பது ஏன்?

புகைச்சலை கிளப்பிய பாரத மாதா படம் கேரள முதல்வர் மவுனம் காப்பது ஏன்?

புகைச்சலை கிளப்பிய பாரத மாதா படம் கேரள முதல்வர் மவுனம் காப்பது ஏன்?

புகைச்சலை கிளப்பிய பாரத மாதா படம் கேரள முதல்வர் மவுனம் காப்பது ஏன்?

ADDED : ஜூன் 15, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு கவர்னராக இருந்த ஆரிப் முஹமது கானுக்கும், மாநில அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் மோதல் ஏற்பட்டது.

பல்கலை துணைவேந்தர் நியமனம் உட்பட பல்வேறு பிரச்னைகளில் எழுந்த அதிகார மோதல், உச்ச நீதிமன்றம் வரை சென்றது. முடிவில், கவர்னர் ஆரிப் முஹமது கான் மாற்றப்பட்டார். புதிய கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டார்.

இந்தாண்டு துவக்கத்தில் கவர்னராக பொறுப்பேற்றது முதல், மாநில அரசுடன் இணக்கமான சூழலையே அவர் கடைப்பிடித்து வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் அவருடன் நட்பு பாராட்டி வருகின்றனர்.

குற்றச்சாட்டு


சில மாதங்களுக்கு முன் மாநில பிரச்னை தொடர்பாக டில்லி சென்ற முதல்வர் பினராயி விஜயனுடன், கவர்னரும் சென்றிருந்தார். அந்தளவுக்கு இருதரப்பிலும் நெருக்கம் இருந்தது. இந்நிலையில், பாரத மாதா புகைப்படத்தால், கவர்னர் - மாநில அரசு இடையே மோதல் எழுந்துள்ளது.

கடந்த 4ம் தேதி கேரள கவர்னர் மாளிகையில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில், காவிக்கொடி ஏந்திய பாரத மாதா படம் வைக்கப்பட்டிருந்தது.

இது மாநில அரசில் அங்கம் வகிக்கும் சி.பி.ஐ., கட்சியைச் சேர்ந்த வேளாண் அமைச்சர் பிரசாத்தை கோபமடைய செய்தது.

'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பயன்படுத்தும் இந்தப்படம், அரசு விழாவில் இடம்பெறலாமா' என கேள்வி எழுப்பிய அவர், நிகழ்ச்சியை புறக்கணித்தார்.

இருதரப்பினரும் தனித்தனியாக உலக சுற்றுச்சூழல் தின விழாவை நடத்தினர். இந்த பிரச்னை முடிந்து 10 நாட்களுக்கு மேலான நிலையில், சி.பி.ஐ., கட்சியினர் மீண்டும் அதை கையில் எடுத்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையை அக்கட்சியினர் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். 'ஆர்.எஸ்.எஸ்.,க்கு ஆதரவாகவும், அரசியல் அமைப்புக்கு எதிராகவும் கவர்னர் செயல்படுகிறார்' என, அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க இடுக்கி சென்ற கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு, அக்கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து சி.பி.ஐ., கட்சியின் மாநில செயலர் பினாயி விஸ்வம் கூறுகையில், 'பாரத மாதாவை நாட்டு மக்கள் அனைவரும் வழிபடுகின்றனர். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., வழிபடும் பாரத மாதா புகைப்படம், அரசு நிகழ்ச்சியில் பயன்படுத்தியது மக்களின் உணர்வுகளை புன்படுத்தியுள்ளது.

'இந்த விஷயத்தில் மாநில அரசு பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது' என, தெரிவித்துள்ளார்.

மவுனம்


முன்னாள் கவர்னர் ஆரிப் கானுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த பினராயி விஜயன் தலைமையிலான அரசு, தற்போதைய கவர்னர் ராஜேந்திர அர்லேகருடன் நெருக்கம் காட்டி வருகிறது.

அடுத்தாண்டு கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், எஞ்சியுள்ள மாதங்களை எந்த பிரச்னையுமின்றி கடக்கவே, கூட்டணியில் பிரதானமாக உள்ள சி.பி.எம்., மவுனம் சாதிப்பதாக பிற கட்சிகள் முணுமுணுக்கத் துவங்கியுள்ளன.

இந்த சூழலில், தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளவே இ.கம்யூ., கட்சி இந்த பிரச்னையை கையில் எடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

-நமது சிறப்பு நிருபர்-.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us