UPDATED : செப் 11, 2026 12:21 PM
ADDED : செப் 11, 2026 12:22 PM

திருப்பூர்:
பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நடந்து வரும், காலாண்டு தேர்வு, 24, 25ம் தேதிகளில் முடிவடைகின்றன. இதையடுத்து, 26 முதல் அக்., 4ம் தேதி வரை ஒன்பது நாள் விடுமுறை. அக்., 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை வழங்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆக., இறுதி வாரம் முதல் செப்., முதல் வாரம் வரை, 80 சதவீத புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புத்தகங்களை காலாண்டு தேர்வுகள் முடிவதற்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மாவட்ட குடோன்களுக்கு முழுமையாக வந்து சேர்ந்துள்ளதா என்பதை சரிபார்த்து, இருப்பை உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலை) உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் ஆக., வரை நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் கூடுதலாக மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர். கூடுதலாக புத்தகங்கள் தேவைப்பட்டால், அவற்றையும் சேர்த்து வழங்கும் வகையில் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். கூடுதல் புத்தகங்கள் தேவைப்படும் பட்சத்தில், பெற்றுக் கொள்ளவும் கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.
