UPDATED : ஜூன் 23, 2011 12:00 AM
ADDED : ஜூன் 23, 2011 10:53 AM
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், முதல்வர்களே இல்லாமல் செயல்படும் அவல நிலையில் உள்ளன.
தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், 30 அரசு பாலிடெக்னிக்குகள், 34 உதவிபெறும் பாலிடெக்னிக்குகள், 394 சுயநிதி பாலிடெக்னிக்குகள் உள்ளன. உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக்குகள், தனியார் வசம் உள்ளதால், நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் நிலை, பரிதாபமாக உள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 30 கல்லூரிகளில், 22ல் முதல்வர்களே கிடையாது. 80 துறைத் தலைவர்கள் பணியிடத்தில், 72 காலியாக உள்ளன. ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களில், 340 பேர் தான் உள்ளனர்.
இதுமட்டுமின்றி, 1960களில் துவக்கப்பட்ட போது இருந்த ஆசிரியர் பணியிடங்கள், கல்லூரிகளின் வசதிகள் இன்றுவரை அதிகரிக்கப்படவில்லை. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கையோ ஆண்டாண்டுக்கு அதிகரித்து, பல ஆயிரங்களாக உயர்ந்து விட்டன. முதல்வர்கள் பணிக்கு தகுதியானவர்கள் பல ஆண்டுகளாக உள்ளனர். இருந்தாலும், அப்பணிக்கு யாரையும் நியமிக்காததால், பாலிடெக்னிக் கல்லூரிகளின் வளர்ச்சிப் பணிகளில் அக்கறை கொண்டு செயல்பட ஆளில்லை.
மதுரையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக்கை எடுத்துக் கொண்டால், இங்கு துவக்க காலத்தில், 270 மாணவர்களுக்கு, 69 ஆசிரியர்கள் இருந்தனர். இன்று, 656 மாணவர்களுக்கு, 22 ஆசிரியர்களே உள்ளனர். அதாவது, மாணவர் பலம் மூன்று மடங்கு அதிகரித்ததைப் போல, ஆசிரியர்களும் அதிகரிக்க வேண்டும். ஆனால், மூன்றில் ஒன்றாக குறைந்துவிட்டது. சமீபத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் நியமிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் ஆசிரியர் சங்க தலைவர் கோபால், பொதுச் செயலர் வி.சுப்பாராஜ், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர், உயர்கல்வித் துறை அமைச்சரிடம், ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்ய மனு கொடுத்தனர். அதில், மாநில அளவில், 390 போதகர் பணியிடங்களை விரிவுரையாளராக மாற்றாததால் பாதிப்பு ஏற்படுகிறது. ரெகுலர், ஷிப்டு மற்றும் பகுதி நேர வகுப்பு என இயங்குவதால், ஆசிரியர்கள் தரமான கல்வியை அளிக்க இயலவில்லை. ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நியமித்த, 100 ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. அதே காலத்தில் பொறியியற் கல்லூரிகளில் பணிநியமனம் பெற்றோர், நிரந்தர பணிபெற்றுவிட்டனர். இதுபோன்ற குறைபாடுகளை களைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
