முதல் பட்டதாரி உதவித் தொகை கிடைக்காத மருத்துவ மாணவர்கள்
முதல் பட்டதாரி உதவித் தொகை கிடைக்காத மருத்துவ மாணவர்கள்
UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM
ADDED : ஜூன் 28, 2011 12:11 PM
முதலாண்டிலேயே, குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கான உதவித் தொகை கிடைக்காததால், சுயநிதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் புலம்பித் தவிக்கின்றனர்.
தமிழக அரசு, கடந்த ஆண்டு முதல், குடும்பத்தில் முதல்பட்டப் படிப்பு படிப்போருக்கு கல்வி உதவித் தொகை அறிவித்துள்ளது. இதன்படி, அதற்கான கல்விக் கட்டணத்தை அரசே வழங்கிவிடும். குடும்பத்தில் யாரும் பட்டம் பெறவில்லை என்பதற்கான சான்றிதழை வருவாய்த் துறையில் பெற்று அனுப்ப வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பிளஸ் 2 முடித்து உயர்கல்வி சென்ற மாணவர்கள் பலரும் விண்ணப்பித்து உதவித் தொகை பெற்றனர். ஆனால், சுயநிதி கல்லூரிகளில், குறிப்பாக, மருத்துவக் கல்லூரிகளில் படித்து விண்ணப்பித்த பலர், இந்த உதவித் தொகையை பெற முடியவில்லை.
தமிழகத்தில், எட்டு சுயநிதி கல்லூரிகளில் படிக்கும், 200க்கும் மேற்பட்டோர் மற்றும் 20 பல் மருத்துவ (சுயநிதி) கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், யாருக்கும் கிடைக்கவில்லை.
இந்த சுயநிதி கல்லூரிகளில் அரசு அறிவித்த கல்விக் கட்டணம், 1 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய். முதலாண்டில் இத்தொகை கிடைக்காததால், இரண்டாம் ஆண்டிலாவது இத்தொகை கிடைக்குமா என தெரியவில்லை என மாணவர்களும், பெற்றோரும் புலம்புகின்றனர். பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை, சில சுயநிதி கல்லூரிகள் மட்டும் கல்விக் கட்டணத்தை தவிர்த்து மற்ற கட்டணத்தை வசூலித்துள்ளன.
அவற்றிலும் பெரும்பாலான கல்லூரிகள், கல்விக் கட்டணத்தை வசூலித்துள்ளன. அரசு தந்த பின் அத்தொகையை, அட்ஜஸ்ட் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளன. அரசு, முதல் பட்டதாரி தொகையை ரத்து செய்ய வில்லை என அறிவித்துள்ளது. எனவே, இந்த உதவித் தொகை கிடைக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
