UPDATED : ஜூலை 01, 2011 12:00 AM
ADDED : ஜூலை 01, 2011 10:24 AM
ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங், வரும் 11ம் தேதி முதல், 25ம் தேதி வரை திருச்சியில் நடக்கிறது. கவுன்சிலிங்கில் 19 ஆயிரம் இடங்கள் இருக்கும் நிலையில், இந்த படிப்பிற்கு 12 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதனால், விண்ணப்பித்துள்ள அனைவருக்கும், சீட் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
இது குறித்து, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் இளங்கோவன் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 682 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், நடப்பு கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் முறையில் நடைபெற உள்ளது. இந்த படிப்பிற்கு, 12 ஆயிரத்து 366 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், மாணவர்களிடம் இருந்து, 1,620 விண்ணப்பங்களும், மாணவியரிடம் இருந்து, 10 ஆயிரத்து 746 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
கவுன்சிலிங்கில், 19 ஆயிரத்து 369 இடங்கள் உள்ளன. இதைவிட, குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால், அனைவருக்கும் கவுன்சிலிங் கடிதம் அனுப்பப்படும்.
கவுன்சிலிங், வரும் 11ம் தேதி முதல், 25ம் தேதி வரை, திருச்சியில் மூன்று மையங்களில் நடக்கின்றன. தினமும், பகல் 12 மணி முதல், மாலை 5 மணி வரை கவுன்சிலிங் நடைபெறும்.
மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு, 11, 12 தேதிகளிலும், உருது, தெலுங்கு, மலையாளம் ஆகிய சிறுபான்மை மொழிகளில் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் ஆங்கில வழியில் படிக்க விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு 13ம் தேதியும் கவுன்சிலிங் நடைபெறும். மற்றவர்களுக்கு, 14ம் தேதி முதல் நடைபெறும்.
கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் தேதி, நேரம் ஆகியவை குறித்து, சம்பந்தபட்ட மாணவர்களுக்கு, தனித்தனியாக கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். துறையின் இணையதளம் மூலமாகவும் (www.dtert.tn.nic.in) மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.
கவுன்சிலிங் விவரம் :
1. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர், தெலுங்கு, மலையாளம், உருது ஆகிய சிறுபான்மை மொழிகளுக்கு விண்ணப்பித்தோர். மற்றும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் விண்ணப்பித்த இரு பாலருக்கும் ஆர்.சி.ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ரயில் நிலையம் அருகில், திருச்சி.
2. அறிவியல் பாடப்பிரிவு மாணவ, மாணவியர் நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கே.கே.நகர், திருச்சி.
3. கலைப்பாட பிரிவு மாணவ, மாணவியர் ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பிராட்டியூர் மேற்கு, மணப்பாறை ரோடு, திருச்சி.
