அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு அரசு செலவில் கல்வி
அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு அரசு செலவில் கல்வி
UPDATED : ஜூலை 04, 2011 12:00 AM
ADDED : ஜூலை 04, 2011 11:26 AM
அரியலூர் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு, அரசு செலவில் தலை சிறந்த தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், 2011-2012ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின டாப் 10 மாணவ, மாணவிகளை, தலை சிறந்த தனியார் பள்ளிகளில் ப்ளஸ் 1வகுப்பில் சேர்த்து, ப்ளஸ் 2 முடிய அரசு செலவில் படிக்க வைக்கும் திட்டத்தின் மூலம், அரியலூர் மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் 10 மாணவ, மாணவிகள் ப்ளஸ் 1 வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுபோல ஐந்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவ, மாணவிகளை, தலை சிறந்த தனியார் பள்ளிகளில் 6ம் வகுப்பில் சேர்த்து, ப்ளஸ் 2 முடிய அரசு செலவில் படிக்க வைக்கும் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு, வட்டாரத்துக்கு ஒருவர் வீதம், 6 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்டவாறு ப்ளஸ் 1 வகுப்பில் சேரும் 10 மாணவ, மாணவிகள் மற்றும் ஆறாம் வகுப்பில் சேரும் 6 மாணவ, மாணவிகளுக்கும், அரியலூர் மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ், பள்ளி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
