UPDATED : ஜூலை 19, 2011 12:00 AM
ADDED : ஜூலை 19, 2011 12:12 PM
பெரிய ஐ.டி., கம்பெனிகள் மட்டுமல்லாமல், இடைநிலை ஐ.டி., கம்பெனிகளும் தங்களது ஊழியர் தேவைக்காக கல்லூரிகளுக்குச் செல்லவுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார மந்த நிலை நிலவியதால் கடந்த சில மாதங்களாக பெரிய ஐ.டி., கம்பெனிகள் மட்டுமே கல்லூரிகளுக்குச் சென்று கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக தங்களுக்கான நபர்களை தேர்வு செய்து கொண்டன. ஆனால் தற்போது மிட்டயர் எனப்படும் இடைநிலை ஐ.டி., கம்பெனிகளுக்கும் அதிக எண்ணிக்கையில் திறன் கொண்ட ஊழியர்கள் தேவைப்படுவதால் இவர்களைத் தேடி கேம்பசுக்குச் செல்லவுள்ளன.
புகழ் பெற்ற மைண்ட் ட்ரீ நிறுவனத்திற்கு மட்டும் 2400 பேர் கேம்பஸ் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இது போன்ற நிறுவனங்கள் புதிதாக பல புராஜக்ட்களைப் பெற்றிருப்பதால் இவற்றில் வேலை அதிகரித்துள்ளது. மகிந்திரா சத்யம் நிறுவனத்திலும் இதே நிலை தான்.
பொதுவாக ஐ.டி., நிறுவனங்கள் 60க்கு 40 என்னும் விகிதத்தில் அனுபவசாலிகளையும் புதியவர்களையும் பணிக்கு எடுத்துக் கொள்கின்றன. தற்போதைய தேவைக்கேற்ப இது 50க்கு 50 என மாறவுள்ளது. புதியவர்களுக்கு ஆண்டுக்கு 2.5 முதல் 2.8 லட்சம் வரை சம்பளம் தரப்படுகிறது. 4 முதல் 5 ஆண்டு அனுபவம் கொண்டவருக்கு இது போல 3 அல்லது 4 மடங்கு சம்பளம் தரப்படுகிறது.
