UPDATED : செப் 08, 2015 12:00 AM
ADDED : செப் 08, 2015 10:05 AM
சென்னை
: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார்,
பள்ளி படிப்பின்போது, உடல் மாற்றத்தை உணர்ந்தார்.
பின், தன் பெயரை பிரதிகா யாஷினி என மாற்றிக்கொண்டு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கோவை பாரதியார் பல்கலையில், முதுகலை பட்டய படிப்பை முடித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு, பிரதிகா யாஷினி விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அசல் சான்றிதழில் இருந்த பெயருக்கும், தற்போதுள்ள பெயருக்கும் இடையேயான முரண்பாட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த மே மாதம் நடந்த எழுத்து தேர்வு எழுத அனுமதி கோரி, உயர் நீதிமன்றத்தை அணுகினார். எழுத்து தேர்வுக்கு பின், உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ளவும், அனுமதிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த மாதம் நடந்த உடல் தகுதி தேர்வில், 100 மீட்டர் ஓட்டத்தில், ஒரு நொடி தாமதமாக வந்தார் என, இவரை தேர்வு செய்யவில்லை. மீண்டும் உயர் நீதிமன்றத்தை, பிரதிகா அணுகினார். நேர்முக தேர்வு, செப்., 5 முதல், 28ம் தேதி வரை நடப்பதால், அதில் கலந்து கொள்ள அனுமதி கோரி, மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. பிரதிகா சார்பில், வழக்கறிஞர் பவானி சுப்பராயன் ஆஜரானார். நேர்முக தேர்வில் கலந்து கொள்ள, பிரதிகாவை அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
