காமராஜ் பல்கலை சிண்டிகேட் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு
காமராஜ் பல்கலை சிண்டிகேட் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு
UPDATED : செப் 24, 2015 12:00 AM
ADDED : செப் 24, 2015 10:43 AM
மதுரை
:
மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால்,
நிர்வாக ரீதியாக பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.
இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம் ஐந்து மாதங்களாக காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, கவர்னர் பிரதிநிதி முருகதாஸ் தலைமையில், தேர்வுக் குழு ஈடுபட்டு உள்ளது. தற்போது, உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில், மூத்த சிண்டிகேட் உறுப்பினர்கள் அடங்கிய கன்வீனர் கமிட்டி பல்கலை செயல்பாடுகளை கண்காணிக்கிறது. வழக்கமாக, பல்கலை வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகள் மேற்கொள்ள சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படும். தற்போது, இப்பல்கலை உட்பட ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அவற்றின் கன்வீனர் கமிட்டிகளுக்கும், செயலர் அபூர்வா தான் தலைவராக உள்ளார்.
இதனால் அதிகரிக்கும் கூடுதல் பணிச் சுமையால், மதுரை காமராஜ் பல்கலை வழக்கமான சிண்டிகேட் கூட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இம்மாதம் 16ம் தேதி நடக்கவிருந்த சிண்டிகேட் கூட்டம், அடுத்தடுத்து 18 மற்றும் 22ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. செயலரின் தேதி கிடைக்காததால், 22ம் தேதியும் அக்கூட்டம் நடக்காமல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இதனால் பல்கலையில் ஆராய்ச்சி பிரிவில் ஆயிரக்கணக்கான பைல்கள் தேங்கியுள்ளதால், அப்பிரிவு முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பி.எச்டி., கைடுஷிப் பிற்கு விண்ணப்பித்து நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சிண்டிகேட், செப்.,22ல் நடப்பதாக இருந்தது. ஆனால் சட்டசபை நிகழ்வுகள் இருந்ததால், செயலர் பங்கேற்க முடியவில்லை. இம்மாதம் இறுதிக்குள் சிண்டிகேட் நடக்க வாய்ப்புள்ளது, என்றார்.
