Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மன சோர்வு நீங்க விழாக்கள் அவசியம்

மன சோர்வு நீங்க விழாக்கள் அவசியம்

மன சோர்வு நீங்க விழாக்கள் அவசியம்

மன சோர்வு நீங்க விழாக்கள் அவசியம்

UPDATED : ஜன 09, 2024 12:00 AMADDED : ஜன 09, 2024 09:53 AM


Google News
சென்னை: வேலையின் அலுப்பைப் போக்க, மன சோர்வு நீங்க விழாக்கள் அவசியம் என  கவிஞர் தேவேந்திர பூபதி பேசினார்.சென்னை புத்தக காட்சியின் நிகழ்வில், கவிஞர் தேவேந்திர பூபதி, அரம்போலும் கூர்மையரேனும் எனும் தலைப்பில் பேசியதாவது:நாம் அறிவின் உச்சத்தில் உள்ளோம். சூரியனை ஆய்வு செய்கிறோம். உடல் உறுப்புகளை மாற்றிக்கொள்கிறோம். ஆனால், மனிதப் பண்புகளை மெல்ல இழந்து வருகிறோம். அறம் இல்லாவிட்டால், அரம்போல் கூர்மையான அறிவு இருந்தும், அதனால் பயன் ஏதும் இல்லை.மெத்த அறிவு படைத்த மனிதரிடம், அறம் எனும் மனித மாண்பு இல்லாவிட்டால், அந்த மனிதர், ஓரறிவுள்ள மரத்திற்கு சமமானவர் என்பதை, வள்ளுவர் தெளிவாக கூறி உள்ளார். நம் இலக்கியங்கள் யாவும், அறத்தை வளர்த்தன. சக மனிதனை மதிக்கக் கற்றுக் கொடுத்தன. விருந்தோம்பலை வளர்த்தன. ஆனால், இன்றைய சமூகம், பக்கத்து வீட்டு மனிதர்களின் பெயரைக்கூட தெரிந்து வைத்திருப்பதில்லை.சிகாகோ நகரில் நடந்த ஆன்மிக மாநாட்டில், நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என விவேகானந்தரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, எந்த மதத்தையும் புண்படுத்தாத இந்து மதத்தைச் சேர்ந்தவன் நான் என்றார் அவர். அதனால்தான், அந்த மாநாட்டில் விவேகானந்தரின் பேச்சு உலகப் புகழ்பெற்றது.பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் எனும் பண்பு அருகிவிட்டது. அறம் இல்லாத மனிதன் ஜடப் பொருளுக்கு சமம். எனவே, அரம்போன்ற கூர்மையான அறிவை வைத்து, மனித குலத்திற்கும், சக மனிதனுக்கும் என்ன செய்யப்போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.விழாக்களும், வழிபாடுகளும் அவசியம் தேவை. வேலையின் அலுப்பைப் போக்க, மன சோர்வு நீங்க விழாக்கள் அவசியம். விழாக்கள் மனித மாண்புகளை வளர்க்கும். செயற்கை அறிவு எனும் நுட்பம் மலைக்கச் செய்கிறது. அந்த நுட்பத்தால் அறம் வளருமா என்பது கேள்விக்குறி. மனித மாண்புகளை தவிர்த்து, அறிவைத் தேடிச் செல்வதில் எவ்வித பயனும் இல்லை.இவ்வாறு பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us