Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ கூட்டணி கட்சிகள் நெருக்கடி: குழப்பத்தில் தி.மு.க.,

கூட்டணி கட்சிகள் நெருக்கடி: குழப்பத்தில் தி.மு.க.,

கூட்டணி கட்சிகள் நெருக்கடி: குழப்பத்தில் தி.மு.க.,

கூட்டணி கட்சிகள் நெருக்கடி: குழப்பத்தில் தி.மு.க.,

ADDED : செப் 25, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
'கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சியில் பங்கு' என கூறி, தி.மு.க., ஆதரவு கட்சிகளுக்கு த.வெ.க., அழைப்பு விடுத்து வரும் நிலையில், கூட்டணி உடையாமல் இருக்க, கடந்த தேர்தலை விட குறைந்த தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடும் நிலை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 173 தொகுதிகளில் போட்டியிட்டு, 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணி, 159 இடங்களை கைப்பற்றியது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி மட்டும் கூடுதலாக சேர்ந்துள்ளது.

ஆட்சியில் பங்கு

இந்த தேர்தலில், தி.மு.க.,வை எதிர்த்து, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியுள்ளதால், கடும் போட்டியை, தி.மு.க., சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது, தி.மு.க.,வுடன் ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, தி.மு.க.,விடம் பேரம் பேசுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, 'ஆட்சியில் பங்கு' என த.வெ.க., தரப்பில் துாது விடப்பட்டு உள்ளது; திரைமறைவில் பேச்சும் நடத்தப்பட்டு உள் ளது.

இந்த தகவல் தி.மு.க., மேலிடத்திற்கு தெரியவந்ததால், கூட்டணி உடையாமல் இருக்க, கடந்த தேர்தலை விட குறைந்த எண்ணிக்கையில் போட்டியிடவும், கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்யவும் தி.மு.க., தயாராகி உள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த தேர்தலை போல, 173 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட வாய்ப்பு இல்லை. கமல் கட்சி கூட, இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கிறது.

மற்ற கூட்டணி கட்சிகளும், விஜய் கட்சியை காரணம் காட்டி, அதிக தொகுதிகளை கேட்டு, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

காங்கிரஸ், 125 தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்துள்ளது. அதில், 60 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதேபோல், 25 தொகுதிகளில் போட்டியிட, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் விரும்புகிறார்.

130க்கும் குறைவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய செயலராக நியமிக்கப்பட்ட வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் சண்முகம் ஆகியோர் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், தலா 10 தொகுதிகளில் போட்டியிட்டு, கட்சியை வலுப்படுத்த விரும்புகின்றனர்.

ம.தி.மு.க.,வுக்கு தனிச்சின்னம் கிடைத்திருப்பதால், 12 தொகுதிகளில் போட்டியிட பட்டியல் தயார் செய்து வருகிறார், அக்கட்சியின் முதன்மைச் செயலர் துரை. வரும் தேர்தலில் அதிக தொகுதிகளை, கூட்டணி கட்சிகள் எதிர்பார்ப்பதால், அதை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

அப்படி செய்தால், 130க்கும் குறைவான தொகுதிகளிலேயே தி.மு.க., போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த விஷயத்தை எப்படி அணுகுவது என்பது குறித்து, தி.மு.க., தலைமை குழப்பம் அடைந்துள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us