'புத்தகயா புத்த பிட்சுகளுக்கே': தீவிரமடையும் போராட்டம்
'புத்தகயா புத்த பிட்சுகளுக்கே': தீவிரமடையும் போராட்டம்
'புத்தகயா புத்த பிட்சுகளுக்கே': தீவிரமடையும் போராட்டம்
ADDED : செப் 25, 2025 01:23 AM

இமயமலையையொட்டிய அழகிய பிரதேசம் சிக்கிம். தேசத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கும் இம்மாநிலத்தில் சத்தமே இல்லாமல் ஒரு யுத்தம் துவங்கி இருக்கிறது. அதுவும் அமைதி மார்க்கத்தை சேர்ந்த புத்த பிட்சுகளிடம் இருந்து ஆரம்பித்திருக்கிறது.
சிக்கிமில் கணிசமான அளவுக்கு புத்த மதத்தினர் வாழ்கின்றனர். இங்குள்ள பெமாயாங்சே, துப்தி மற்றும் ரும்டெக் மடாலயங்கள் பல நுாற்றாண்டுகளாக புத்த மதத்தை காக்கும் கடமையை சிறப்பாக செய்து வருகின்றன.
இந்த மடாலயங்களில் இருக்கும் புத்த பிட்சுகளுக்கு அதிகப்படியான ஆசையே ஞானம் பெறுவது தான். ஆனால், அதையும் கடந்து மிக முக்கியமான உரிமையை மீட்கும் கடமை தங்களுக்கு இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த உரிமை பீஹாரில் இருக்கும் புத்த கயா. புத்தர் ஞானம் அடைந்த இடமாக போற்றப்படும் இந்த கோவில் தான் உலகம் முழுதும் இருக்கும் புத்த பிட்சுகளுக்கு தலைமை பீடம். இந்த கோவிலின் நிர்வாகம் யாருக்கு சொந்தம் என்பது தான் நுாற்றாண்டு காலமாக நடந்து வரும் போராட்டமாக இருக்கிறது. இந்த நீண்ட கால போராட்டத்திற்கு இதுவரை முடிவே கிடைக்கவில்லை.
இதனால், சாதுவான புத்த பிட்சுகள் தங்கள் உரிமையை மீட்க தற்போது களத்தில் இறங்க ஆரம்பித்துவிட்டனர்.
புத்த மதம் சாராத ஒருவரை, கோவிலின் நிர்வாகியாக பணியமர்த்த வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே, இவர்களது முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
எனவே, 1949ல் கொண்டு வரப்பட்ட புத்த கயா கோவில் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, நிர்வாகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற போராட்டத்தை புத்த பிட்சுகள் முன் எடுத்துள்ளனர்.
அதற்கான உரிமை குரல் தான், சிக்கிமின் இமயமலை தொடர் முழுதும் தற்போது எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது.
சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக்கில் உள்ள என்சே புத்த மடாலயத்தில் ஆழமான பிரார்த்தனைகளுடன், புத்த பிட்சுகளின் போராட்டம் துவங்கி இருக்கிறது.
'1949ல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்யுங்கள்; புத்த கயா புத்த பிட்சுகளுக்கே' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சில கி.மீ., துாரம் வரை புத்த பிட்சுகளும், பக்தர்களும் மிக அமைதியான முறையில் பேரணி நடத்தியதை கண்டபோது, இமயமலை சிகரங்களில் இருந்து மெல்ல எழுந்த பனிமூட்டம் போல காட்சியளித்தது.
போராட்டம் குறித்து பேசிய சங்கா தொகுதி எம்.எல்.ஏ., சோனம் லாமா, ''இது எங்களது அரசியலமைப்பு உரிமை, மத கடமை. அதற்காகவே அமைதியான வழியில் கோரிக்கையை எழுப்புகிறோம்,'' என்றார்.
'புத்த கயா புத்த பிட்சுகளுக்கே' என்ற முழக்கத்தை நிதர்சனமாக்க, அகில இந்திய புத்த மத அமைப்பு, தேசிய அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்காக உண்ணாவிரத போராட்டங்கள், கையெழுத்து இயக்கம், உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் என, பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு கட்டமாகவே, சிக்கிமை சேர்ந்த புத்த பிட்சுகளும் போராட்டத்தை தீவிரமாக கையில் எடுத்திருக்கின்றனர்.
பிரார்த்தனை கூட்டங்கள், விழிப்புணர்வு பேரணிகள், மாணவர்கள் தலைமையில் பிரசார கூட்டங்கள் என, வாரந்தோறும் தங்களுக்கான உரிமை போராட்டத்தை நடத்தி, அதை உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.
புத்த கயாவை மீட்டெடுக்கும் போராட்டம் வடகிழக்கு மாநிலம் மட்டுமல்ல, நாடு முழுதும் வேகமெடுக்கப் போகிறது.
எங்கெல்லாம் புத்த பிட்சுகள் சிறு குழுக்களாக வாழ்கின்றனரோா, அங்கெல்லாம் கூட, புத்த கயாவுக்கான உரிமை போராட்டங்கள் துளிர்விடும். அவை அமைதியாக, ஒழுக்கமாக நடந்தாலும் தேசிய அளவில் நிச்சயம் கவனம் பெறும்.
-நமது சிறப்பு நிருபர்-