அம்மா குடிநீர் போச்சு; அப்பா குடிநீர் வருது!
அம்மா குடிநீர் போச்சு; அப்பா குடிநீர் வருது!
அம்மா குடிநீர் போச்சு; அப்பா குடிநீர் வருது!
ADDED : செப் 24, 2025 08:06 AM

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், பயணியர் வசதிக்காக மீண்டும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட உள்ளன; இது, அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். இதற்கு 'அப்பா' குடிநீர் என பெயர் வைக்க, ஆலோசனை நடந்து வருகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நல்ல வரவேற்பு
தமிழக போக்குவரத்து துறை சார்பில், அம்மா குடிநீர் திட்டம், 2013ல் துவக்கப்பட்டது. இதற்காக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், 2.47 ஏக்கரில் , 10.5 கோடி ரூபாயில், குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. பஸ் நிலையங்களில், 10 ரூபாய்க்கு, 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 'அம்மா குடிநீர்' என்ற பெயரில் விற்கப்பட்டது. இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தினசரி, 2 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டது.
குடிநீர் உற்பத்தி நிலையத்தை முறையாக பராமரிக்காததாலும், புதிய இயந்திரங்கள் வாங்காததாலும், திட்டம் முடங்கியது. இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழகங்களில் மீண்டும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, டெண்டர் வெளியிடப்பட உள்ளது. முதல்கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில், இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது. பின்னர், தேவை அடிப்படையில் மற்ற அரசு போக்குவரத்து கழகங்களிலும், இத்திட்டத்தை விரிவுபடுத்த, தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 300 கி.மீ., துாரத்திற்கு மேல் செல்லும் தடத்தில், 1,080க்கும் அதிகமான 'டீலக்ஸ், ஏசி' விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புகார் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். அவர்கள் பயணத்தின்போது, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என, புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, முதல் கட்டமாக அரசு விரைவு பஸ்களில் மட்டும், கண்டக்டர்கள் உதவியுடன் குடிநீர் பாட்டில்களை விற்க முடிவு செய்யப் பட்டுள்ளது. ஒரு லிட்டர் குடிநீரை, 10 ரூபாய்க்கு விற்கவும், அதற்கு 'அப்பா' குடிநீர் என பெயர் சூட்டவும், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழக அரசு பெயரை முடிவு செய்யும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக திட்டத்தை துவக்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.