Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ பா.ஜ., ஆதரவு சிறிய கட்சிகளை இழுத்து கூட்டணியை பலப்படுத்த தி.மு.க., புது திட்டம்

பா.ஜ., ஆதரவு சிறிய கட்சிகளை இழுத்து கூட்டணியை பலப்படுத்த தி.மு.க., புது திட்டம்

பா.ஜ., ஆதரவு சிறிய கட்சிகளை இழுத்து கூட்டணியை பலப்படுத்த தி.மு.க., புது திட்டம்

பா.ஜ., ஆதரவு சிறிய கட்சிகளை இழுத்து கூட்டணியை பலப்படுத்த தி.மு.க., புது திட்டம்

Latest Tamil News
சட்டசபை தேர்தலில், தற்போதைய கூட்டணியை மேலும் பலப்படுத்தி, ஜாதி ரீதியாக ஓட்டுக்களை வளைக்கும் வகையில், நான்கு சிறிய கட்சிகளை சேர்க்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், ஆளும் தி.மு.க., வை எதிர்கொள்ள, அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல், அரசியல் வட்டாரத்தில், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கூட்டணி ஏற்பட்டால், தி.மு.க., வெற்றிக்கு சவாலாக இருக்கும் என, 'இண்டி' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கருதுகின்றனர்.

ஜாதிக்கட்சிகள் அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போதைய கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என, தி.மு.க., கருதுகிறது.

இதற்காக, தே,ஜ., கூட்டணியில் இருந்த இரண்டு ஜாதிக் கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த ஒரு ஜாதிக் கட்சி, எந்த கூட்டணியிலும் இல்லாத மற்றொரு ஜாதிக் கட்சி, ஆகியவை தி.மு.க.,வில் தலா ஒரு தொகுதியைப் பெற்று தேர்தலில் போட்டியிட, பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

தி.மு.க., கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், ஜான் பாண்டியன் தலைமையிலான, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி இடம் பெற்றிருந்தது.

எழும்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஜான் பாண்டியன், கடந்த லோக்சபா தேர்தலில், தென்காசி தொகுதியில், தே.ஜ., கூட்டணியில் சீட் பெற்று போட்டியிட்டார்; ஆனால், தோல்வி அடைந்தார்.

மதுரை விமான நிலையத்திற்கு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்துவது, அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ஜான் பாண்டியனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, அவரை தி.மு.க., கூட்டணியில் சேர்க்க, ஆளும்கட்சி தரப்பில் பேச்சு துவக்கப்பட்டுள்ளது. அவர் வழியே தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை பெறலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தலா ஒரு தொகுதி அதுபோல், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தனியரசு, எந்த அணியிலும் இடம் பெறாமல் உள்ளார்.

அவர், 'கரூர் சம்பவம் தொடர்பாக, த.வெ.க., தலைவர் விஜயை கைது செய்ய வேண்டும் ' என, குரல் கொடுத்து, ஆர்ப்பட்டம் நடத்தினார். எனவே, அவரை தி.மு.க., கூட்டணியில் இணைத்தால், கொங்கு மண்டலத்தில் வெள்ளாளர் கவுண்டர் சமுதாய ஓட்டுகளை அள்ளலாம் என, தி.மு.க., கருதுகிறது.

அதேபோல், முதலியார் சமுதாயத்தின் ஓட்டுகளைப் பெற, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மகனுக்கு ஆரணி தொகுதியை ஒதுக்கவும் தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக, தி.மு.க., அரசு மீது பா.ஜ., குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அக்கூட்டணியில் உள்ள ஏ.சி.சண்முகம், தி.மு.க., அரசை விமர்சிக்காதது குறிப்பிடத்தக்கது.

முத்தரையர் சமுதாயத்தின் ஓட்டுகளை ஒட்டுமொத்தமாக வளைக்க, தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வக்குமாரையும், கூட்டணியில் இணைக்க, தி.மு.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

ஜாதி அடிப்படையில் கட்சிகளை நடத்தி வரும், சிறிய கட்சிகளுக்கு, தலா ஒரு சட்டசபை தொகுதியை வழங்குவதற்கும், அவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும், தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us