Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/கரூர் சம்பவத்தில் விஜயை கைது செய்ய திட்டம்? 7 கேள்விகளுடன் தகவல் சேகரித்த உளவுத்துறை!

கரூர் சம்பவத்தில் விஜயை கைது செய்ய திட்டம்? 7 கேள்விகளுடன் தகவல் சேகரித்த உளவுத்துறை!

கரூர் சம்பவத்தில் விஜயை கைது செய்ய திட்டம்? 7 கேள்விகளுடன் தகவல் சேகரித்த உளவுத்துறை!

கரூர் சம்பவத்தில் விஜயை கைது செய்ய திட்டம்? 7 கேள்விகளுடன் தகவல் சேகரித்த உளவுத்துறை!

UPDATED : அக் 04, 2025 10:07 AMADDED : அக் 04, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
சென்னை: கரூரில், 41 பேர் பலியான சம்பவத்தில் விஜயை கைது செய்தால், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படுமா என தெரிந்துகொள்ள, ஏழு கேள்விகளுடன் உளவுத்துறையினர், 'சர்வே' எடுத்து வருகின்றனர்.

த.வெ.க., தலைவர் விஜய், விழுப்புரம், மதுரையில் மாநாடு நடத்திய பின், 2026 சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, கடந்த செப்., 13ல், திருச்சியில் தொடங்கினார். அடுத்தாண்டு பிப்ரவரி வரை, சுற்றுப்பயண விபரம் அறிவிக்கப்பட்டது. ஆனால், செப்., 27ல், கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட, 41 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அக்கட்சி பொதுச்செயலர் உட்பட, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த விவகாரத்தில் விஜயை கைது செய்ய ஆளும் தரப்பு யோசித்து வருகிறது. விஜயை கைது செய்தால், அதுவே அவருக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்திவிடும் என, தி.மு.க., தரப்புக்கு சிலர் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதனால், இந்த விஷயத்தில் அவசரப்படாமல் மக்கள் கருத்தறிந்து செயல்படலாம் என, தி.மு.க., தரப்பு முடிவெடுத்துள்ளது.

அதற்காக, மக்கள் கருத்தறியும் முயற்சியில் அரசு தரப்பை முடுக்கி விட்டுள்ளது, தி.மு.க., விஜயை கைது செய்தால், மக்களிடம் அது எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து உளவுத்துறையினர் கருத்தறிந்து சொல்ல, அரசு தரப்பில் முடுக்கி விட்டுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுதும், சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், வணிகர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், பெண்கள், கல்லுாரி மாணவ - மாணவியர், ஆட்டோ டிரைவர்கள், பஸ் பயணியர் உள்ளிட்டோரிடம், ஏழு கேள்விகளுடன், உளவுத்துறை போலீசார் கருத்து கேட்டு தகவல் சேகரித்துள்ளனர்.

உளவுத்துறை போலீசார் கூறியதாவது: கரூர் சம்பவம் குறித்து, மக்களிடம், ஏழு கேள்விகள் கேட்கப்பட்டதில், கலவையான கருத்துகள் வந்துள்ளன. கரூர் பிரசார கூட்டத்துக்கு, போலீஸ் அதிகாரிகள் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று பலர் சொன்னாலும், இந்த விஷயத்தில், விஜயை அரசு கைது செய்திருக்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக கூறி உள்ளனர். உளவுத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்பைப் போலவே, தனியார் ஏஜென்சிகளும் நடத்தி உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உளவுத்துறையினரின் கேள்விகள்:

1. கரூரில் இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, த.வெ.க.,வினர் ஆறுதல் சொல்லாதது அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
2. பிரசார கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது சரியா?
3. கரூரில் பிரசார கூட்டத்துக்கு வந்திருந்தோருக்கு, குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாதது சரியா?
4. இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அலை அலையாக மக்கள் சென்றது சரியானதா?
5. சம்பவத்துக்குப் பின் வீடியோ வெளியிட்ட நடிகர் விஜய், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலாக நாலு வார்த்தை பேசாதது சரியா?
6. நடந்த சம்பவத்துடன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புபடுத்துவது சரியா?
7. கரூரில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசு தரப்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இந்த அணுகுமுறை சரியா?



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us