காங்கிரசை சிறுக சிறுக விழுங்க தி.மு.க., தயாராகி விட்டது; தமிழக காங்., நிர்வாகிகள் ஆவேசம்
காங்கிரசை சிறுக சிறுக விழுங்க தி.மு.க., தயாராகி விட்டது; தமிழக காங்., நிர்வாகிகள் ஆவேசம்
காங்கிரசை சிறுக சிறுக விழுங்க தி.மு.க., தயாராகி விட்டது; தமிழக காங்., நிர்வாகிகள் ஆவேசம்
ADDED : செப் 23, 2025 06:30 AM

கரூர் நகர மகளிர் காங்கிரஸ் தலைவர் கவிதா, நேற்று தி.மு.க.,வில் இணைந்ததால், காங்., நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்க வேண்டும் என தமிழக காங்கிரசில் குரல் எழுந்துள்ளது. கூடுதல் தொகுதிகளை தி.மு.க., தராவிட்டால், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் எனவும், கட்சி மேலிடத்தில் சிலர் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கரூர் மகளிர் காங்கிரஸ் தலைவர் கவிதா, நேற்று தி.மு.க.,வில் இணைந்தார். இதையடுத்து, 'கூட்டணி தர்மத்தை, தி.மு.க., மீறி விட்டது; காங்கிரசை சிறுக சிறுக விழுங்க தி.மு.க., தயாராகி விட்டது' என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக காங்., துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி அறிக்கை:
தி.மு.க.,வும் காங்கிரசும் ஒரே கூட்டணியில் உள்ளன.
இந்த நேரத்தில், தமிழகம் தலைநிமிர முதல்வர் ஸ்டாலின் தலைமையே தேவை என உணர்ந்துள்ள கவிதாவை, தி.மு.க.,வில் இணைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.
இது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. இதுபோல, கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை, தி.மு.க.,வில் இணைப்பது தவறு என, ஆளும் கட்சியான தி.மு.க.,வின் தலைமை உணர வேண்டும்.
இது, கூட்டணியை பலவீனப்படுத்தும் செயல். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல், முதல்வர் ஸ்டாலின் தடுப்பார் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக காங்., பொதுச்செயலர் பாஸ்கரன் அறிக்கையில், 'இது, எந்தவிதமான கூட்டணி தர்மம் என தெரியவில்லை. இதை எப்படி காங்கிரஸ் தலைமை அனுமதிக்கிறது' என, கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக காங்., பொதுச்செயலர் முரளிதரன் அறிக்கையில், 'செந்தில் பாலாஜி, பிள்ளையார் சுழி போட்டு விட்டார். இனிமேல், காங்கிரசின் எதிர்காலத்தை, எப்படி சொல்லி நம் தலைவர்களுக்கு புரிய வைப்பது?' என கூறியுள்ளார்.
இதற்கிடையே, 'அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கி வருகிறது; காங்கிரசை சிறுக சிறுக விழுங்க தி.மு.க., தயாராகி விட்டது' என, சமூக வலைதளங்களில், காங்கிரசார் பதிவிட்டு வருகின்றனர்.
- நமது நிருபர் -