/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆக., 2ம் தேதி ரூ.12,700 கோடிக்கு முதல்வர் பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஆக., 2ம் தேதி ரூ.12,700 கோடிக்கு முதல்வர் பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு
ஆக., 2ம் தேதி ரூ.12,700 கோடிக்கு முதல்வர் பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு
ஆக., 2ம் தேதி ரூ.12,700 கோடிக்கு முதல்வர் பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு
ஆக., 2ம் தேதி ரூ.12,700 கோடிக்கு முதல்வர் பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு
ADDED : ஜூலை 26, 2024 04:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்குகிறது.2ம் தேதி நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் பட்ஜெட்டினை தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். லோக்சபா தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்திற்கு 4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. கடந்த மாதம் கவர்னர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடிய திட்ட குழு 12,700 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கலுக்கு இறுதி வடிவம் கொடுத்தது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் அனுமதி பெற்ற பின் தான், பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும். இதற்கான கோப்பு மத்திய அரசின் நிதி, உள்துறை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டுக்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை.
மத்திய அரசு அனுமதி கிடைக்காததால் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய காலதாமதமானது. பட்ஜெட் ஒப்புதலுக்காக முதல்வர் ரங்கசாமி டில்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சந்திக்காதது தொடர்பாக காங்., அ.தி.மு.க., கட்சிகள் கேள்வி எழுப்பி குற்றம் சாட்டி வந்தன.
இதற்கிடையில், புதுச்சேரி அரசின் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி துவங்கும் என்றும், 2ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டினை தாக்கல் செய்வார் என, சபாநாயகர் செல்வம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர், கூறியதாவது:
புதுச்சேரியின் 15வது சட்டசபையின் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார். மறுநாள் 1ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.
ஆகஸ்ட் 2ம் தேதி காலை 9:30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 12,700 கோடி ரூபாய்க்கான மாநில அரசின் பட்ஜெட்டினை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.
புதுச்சேரி பட்ஜெட்டில் நிதி குறைக்கப்படவில்லை. புதுச்சேரி அரசு கேட்டதை மத்திய அரசு கொடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளிலும் புதுச்சேரி அரசு கேட்டதை மத்திய அரசு கொடுத்துள்ளது. எந்தந்த திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி கொடுத்துள்ளது என்பது பட்ஜெட் தாக்கலின்போது தெரிய வரும்' என்றார்.
பட்ஜெட் தாக்கலையொட்டி புதுச்சேரி சட்ட சபை வளாகம் புதுபொலிவு பெறுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.