/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பதக்கங்களை குவித்து வரும் வீரர்கள் சாலையில் பயிற்சி பெறும் அவலம் பதக்கங்களை குவித்து வரும் வீரர்கள் சாலையில் பயிற்சி பெறும் அவலம்
பதக்கங்களை குவித்து வரும் வீரர்கள் சாலையில் பயிற்சி பெறும் அவலம்
பதக்கங்களை குவித்து வரும் வீரர்கள் சாலையில் பயிற்சி பெறும் அவலம்
பதக்கங்களை குவித்து வரும் வீரர்கள் சாலையில் பயிற்சி பெறும் அவலம்
ADDED : ஜூன் 12, 2025 12:28 AM

பாகூர், : கிருமாம்பாக்கம் பகுதியில் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்த வீரர்கள், பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு திடல் இல்லாததால், சாலைகளில் பயிற்சி பெறும் அவலம் உள்ளது.
கிராம பகுதியில் உள்ள இளைஞர்களிடம் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், அரசு தரப்பில் இருந்து விளையாட்டு திடல், உபகரணங்கள் போன்ற எதுவும் வழங்கப்படாத நிலையிலும், சர்வதேச தேசிய, மாநில அளவில் பல்வேறு பிரிவுகளில் வென்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதற்கு எடுத்து காட்டாக கிருமாம்பாக்கத்தை மையமாக கொண்டுள்ள 14 கிராமங்களை சேர்ந்த இளைஞர்களை கூறலாம்.
கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம இளைஞர்கள், விளையாட்டு திடல் இல்லாததால், அங்குள்ள தனியார் கல்லுாரி எதிரே உள்ள ஒரு இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக, பேஸ்பால், சாட் பால், கயிறு இழுத்தல், டென்னிஸ் பால் கிரிக்கெட் உள்ளிட்ட பயிற்சி பெற்று வந்தனர்.
இதன் மூலமாக, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 54 தங்கம், 34 வெள்ளி, 32 வெண்கல பதக்கங்களை வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடம் கிடைத்து வந்தது.
இந்நிலையில், விளையாட்டு திடலாக பயன்படுத்தி வந்த இடம், பாகூர் கூட்டுறவு வீட்டு வசதிவாரியம் சார்பில், விலைக்கு வாங்கப்பட்டு, மனைகளாக பிரிக்கப்பட்டது.
விளையாட்டு திடல் பறிபோனதால், பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர். விளையாட்டுதிடல் வேண்டும் என, அரசுக்கு கோரிக்கைவைத்தும் நடவடிக்கை இல்லை.
விளையாட்டு திடல் இல்லாததால் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், சாலையில் பயிற்சி பெறும் நிலை உள்ளது.
மொபைல் போன், வீடியோ கேம், சமூக வலைதளங்கள் என, தவறான பழக்கத்தில் மூழ்கி கிடக்கும் சிறுவர்களையும், இளைஞர்களையும் விளையாட்டின் மூலமாக மட்டுமே மீட்டெடுக்க முடியும்.
எனவே, கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள 14 கிராம இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற கூடிய வகையில், ஒருங்கிணைந்த விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டி, போராட்டத்தில் ஈடுபட வீரர்கள் தயாராகி வருகின்றனர்.