ADDED : மார் 27, 2025 03:57 AM

பாகூர்: பாகூர் அருகே பட்டப்பகலில் கோவிலுக்குள் புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரையாம்புத்துார் அடுத்த பனையடிக்குப்பம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை பூஜைகளை முடித்து, கோவிலை மூடிவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், கோவிலின் உள்ளே இருந்து சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அருகில் சென்று பார்த்துள்ளனர். கோவிலின் கதவில் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.
உள்ளே மர்ம நபர் ஒருவர், உண்டியலை உடைத்தும், அங்கிருந்த செப்பு குடம், அண்டா உள்ளிட்ட பூஜை பொருட்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். தப்பியோட முயன்ற அவரை பொது மக்கள் மடக்கி பிடித்து கரையாம்புத்துார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வளவனுார் அடுத்த மோட்சக்குளம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த குமார் மகன் உதயபாரதி, 19; என்பதும், இவர் மீது ஏற்கனவே கஞ்சா, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த இரும்பு கம்பி மற்றும் திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தார். பட்டப்பகலில் கோவிலின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.