/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் திட்டம் இழுத்தடிப்பு ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் திட்டம் இழுத்தடிப்பு
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் திட்டம் இழுத்தடிப்பு
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் திட்டம் இழுத்தடிப்பு
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் திட்டம் இழுத்தடிப்பு
ADDED : ஜூலை 13, 2024 12:20 AM

காஞ்சிபுரம், சென்னையை ஒட்டி அமைந்துள்ள, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில், 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன.
அதற்கு ஏற்ப அப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஏதுவாக, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகியவை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதனால், அப்பகுதிகளில், சாலை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருவது மட்டுமின்றி, அவர்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய, ரயில் போக்குவரத்து வசதியை உருவாக்குவது அவசியமாகியுள்ளது.
'பயணியர் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்துக்காக, ஆவடி -- ஸ்ரீபெரும்புதுார் -- கூடுவாஞ்சேரி வழித்தடத்தில், 60 கி.மீ., துாரம் புது ரயில் பாதை அமைக்கப்படும்' என, 2013ல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டப் பணியை நிறைவேற்ற, மொத்தம், 839 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டது.
எனினும், அப்போது, போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததால், அடுத்தக்கட்ட பணிகள் நடக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. இத்திட்டம் எப்போது வேகமெடுக்கும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.
இத்திட்டத்திற்கானபூர்வாங்கப் பணிகள், 2022ல் வேகமாக நடந்தன. குறிப்பாக, புதிய ரயில் பாதை திட்டத்துக்கு இறுதிக்கட்ட சர்வே பணிகள் மேற்கொள்ள தெற்கு ரயில்வே, 2022ல் 'டெண்டர்' வெளியிட்டது.
கடந்த மத்திய பட்ஜெட்டில், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரயில் திட்டத்துக்கு, 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யாததால், இந்த திட்டத்தில் பெரிய அளவில் பணிகள் நடக்கவில்லை.
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி திட்டத்திற்கு, மொத்தம் 839 கோடி ரூபாய் தேவை என, கணக்கிடப்பட்டுள்ளது.
இதில், முதற்கட்டமாக 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்ட சர்வே பணிகளே இன்னும் முடியாமல் இருக்கின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் எப்போது நடக்கும் என, ரயில் பயணியர் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேபோல, சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்துார் பகுதியில் அமைய இருக்கிறது. விமான நிலையத்தையும், காஞ்சிபுரத்தையும் இணைக்கும் வகையில், ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என, காஞ்சிபுரம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை புறநகர் மின்சார ரயில் பாதைகளுடன், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரியை இணைக்கும் வகையில், புதிய பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, சர்வே பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன.
இந்த திட்டத்தை செயல்படுத்த பெரிய அளவில் நிதி தேவை. ஒட்டுமொத்த நிதியையும் ரயில்வே ஒரே நேரத்தில் ஒதுக்கிட முடியாது. ஒவ்வொரு பட்ஜெட்டில் கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் மத்திய பட்ஜெட்டிலும், புதிய ரயில் பாதை பட்டியலில், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் -கூடுவாஞ்சேரி ரயில்பாதை திட்டத்தையும் இணைத்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
எவ்வளவு நிதி என்பது குறித்து இப்போது கூற முடியாது. வரும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதிக்கு ஏற்ப, பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசு இணைந்து பங்களிப்பு செய்தால், இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.