Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாகனங்கள் செல்ல 'ரெடிமேட்' சுரங்கப்பாதை முதல் முறை! இரும்புலியூரில் 195 அடி நீளத்தில் அமைகிறது

வாகனங்கள் செல்ல 'ரெடிமேட்' சுரங்கப்பாதை முதல் முறை! இரும்புலியூரில் 195 அடி நீளத்தில் அமைகிறது

வாகனங்கள் செல்ல 'ரெடிமேட்' சுரங்கப்பாதை முதல் முறை! இரும்புலியூரில் 195 அடி நீளத்தில் அமைகிறது

வாகனங்கள் செல்ல 'ரெடிமேட்' சுரங்கப்பாதை முதல் முறை! இரும்புலியூரில் 195 அடி நீளத்தில் அமைகிறது

ADDED : ஜூலை 26, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
தாம்பரம் :தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பாலத்தில், 40 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வரும் நெரிசலுக்கு தீர்வாக, அங்கு 1 கி.மீ., துாரத்திற்கு சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. சாலைக்கு அடியில் வாகனங்கள் இரட்டை வழித்தடத்தில் செல்லும் வகையில், 195 அடி நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைகிறது. 'ப்ரீகாஸ்ட்' எனப்படும் ரெடிமேட் கான்கிரீட் பெட்டிகள் அமைத்து, வாகனங்கள் செல்லும் வகையிலான சுரங்கப்பாதை அமைக்கப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை.

தென் மாவட்டங்களில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் கனரக வாகனங்கள், பெருங்களத்துார் அடுத்த இரும்புலியூர் ரயில்வே பாலத்தை கடந்து, தாம்பரத்தில் நுழைகின்றன.

தாம்பரம் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை, ஜி.எஸ்.டி., சாலை ஆறுவழிப்பாதையாக இருந்தாலும், இரும்புலியூர் பாலம் உள்ள இடத்தில், 1 கி.மீ., துாரத்திற்கு இருவழிப்பாதையாக உள்ளது. இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், இந்த பாலத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

40 ஆண்டு சிக்கல்


குறிப்பாக, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், மற்ற பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள், இரும்புலியூரில் தேங்கி நின்று, பாலத்தை கடக்க நீண்ட நேரம் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வாக, அங்கு ரயில்வே பாலத்தையும், சாலையையும் அகலப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

இதன்படி, சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்தாண்டு துவங்கியது.

முதற்கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையின் கிழக்குப் பகுதியில், ரயில்வே பாலத்தை அத்துறை அகலப்படுத்தியது. தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையின் கிழக்கு - மேற்கு பகுதிகளில் அகலப்படுத்தும் பணியை துவக்கியது.

மேற்கு பகுதியில், தண்டவாளத்தை ஒட்டி, 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில், 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

கிழக்கு பகுதியில் பீர்க்கன்காரணை ஏரியை ஒட்டிஉள்ள பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்களும், வேல்நகர் மற்றும் தேவநேச நகரிலிருந்து வரும் வாகனங்களும் இரும்புலியூர் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்கின்றன.

வண்டலுார் மார்க்கமாக இருந்து வருவோரும், நெடுங்குன்றம், சதானந்தபுரம், வேல் நகர், தேவநேச நகர்களுக்கு செல்ல, ஏரிக்கரை நிறுத்தத்தில், 'யு - டர்ன்' எடுக்கின்றனர். இதனால், ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில், 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, சாலையை அகலப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், வாகனங்கள் 'யு - டர்ன்' எடுத்துச் செல்ல வசதி ஏற்படும்; போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்படும்.

'ப்ரீகாஸ்ட்' எனும் ரெடிமேட் சிமென்ட் பெட்டி முறையில் இப்பணி நடக்க உள்ளது.

இப்பணி நடக்கும் வேளையில், சாலையின் மேல் பகுதியில் கடக்கும் வாகனங்களால், பணியில் பாதிப்பு ஏற்படலாம்; வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கலாம்.

சாலையில் மாற்றம்


அதனால், தாம்பரம் - வண்டலுார் மார்க்கமான சாலையின் மேற்பகுதியில், தற்காலிக வேகத்தடை அமைத்து, வாகனங்கள் மெதுவாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் மெதுவாக செல்வதால், அங்கு நெரிசல் அதிகரித்துள்ளது. ஓரிரு மாதங்களில், சுரங்கப்பாதை பணி 50 சதவீதம் முடிந்ததும், சாலையின் மேற்கு பகுதியில், ரயில்வே பணிகளை துவக்க ஏதுவாக, சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

அதற்குள், ரயில்வே பணியும், எஞ்சியுள்ள வாகன சுரங்கப்பாதை பணியும் முழுமையாக முடித்து, 2025ல் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

பல்வேறு திட்டங்களில், 'பாக்ஸ் புஷ்சிங்' முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இரும்புலியூரில் இருவழி சுரங்கப்பாதை பணியில், 195 அடி நீளத்திற்கு ஐந்து ரெடிமேட் பெட்டிகள் பொருத்தப்படுகின்றன. இவ்வளவு நீளம் உடைய ரெடிமேட் கட்டமைப்பை, பாக்ஸ் புஷ்சிங் முறையில் அழுத்தி பொருத்துவது என்பது, தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை.

இப்பணி முடிந்தால், வண்டலுாரில் இருந்து வரும் வாகனங்களும், சுரங்கப்பாதை வழியாக 'யு - டர்ன்' எடுத்து, வேல் நகர், தேவநேச நகர், நெடுங்குன்றம், சதானந்தபுரம் மற்றும் வண்டலுார் பகுதிகளுக்கு செல்லலாம்.

அதேபோல், வேல்நகர், தேவனேச நகர், பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், சுரங்கப்பாதையில் சென்று, ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியில் வலது புறம் திரும்பி தாம்பரத்திற்கு செல்லலாம் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுரங்கப்பாதை

எப்படி அமைகிறது?தாம்பரம் - வண்டலுார் சாலையின் இடது பக்கம், பழைய ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, வாகன சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. ராட்சத ரெடிமேட் சிமென்ட் பெட்டிகளை பொருத்தி, இப்பாதை அமைக்கப்படுகிறது. மேற்புறம் சாலை உள்ள நிலையில், பக்கவாட்டில் மண்ணை குடைந்து 'பாக்ஸ் புஷ்சிங்' முறையில் இப்பாதை அமைக்கப்படுகிறது.ரெடிமேட் சிமென்ட் பெட்டிகளை, 14 - 16 ஜாக்கிகளை பக்கவாட்டில் பொருத்தி, சாலைக்கு அடியில் உந்தி தள்ளப்படுகிறது. ஹைட்ராலிக் முறையில் இயக்கப்படும் இந்த ஜாக்கிகள், அழுத்தம் காரணமாக ஒரே நேரத்தில் சிமென்ட் பெட்டியை சாலைக்கு அடியில் தள்ளும். 300 டன் தாங்கு திறனுடைய இந்த ஜாக்கிகளின் அழுத்தத்தால், மண்ணை துளைத்து கொண்டு சிமென்ட் கட்டமைப்பு செல்லும்.இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரு நாளில் 2 அடி துாரத்திற்கு மட்டுமே சிமென்ட் பெட்டி தள்ளப்படும். கெட்டி மண் தட்டுப்படும் இடங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படாது என்பதால், அப்போது மட்டும் பொக்லைன் இயந்திரம் வாயிலாக தோண்டப்படும். இப்பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us