Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீடு தேடி பட்டா துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

வீடு தேடி பட்டா துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

வீடு தேடி பட்டா துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

வீடு தேடி பட்டா துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

ADDED : அக் 14, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
போரூர்,''மக்கள் அரசை தேடி சென்ற நிலை மாறி, அரசே வீடு தேடி சென்று பட்டா வழங்கி வருகிறது. தி.மு.க., ஆட்சியில் இதுவரை, 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது,'' என, போரூரில் நடந்த பட்டா வழங்கும் நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 1,600 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, போரூர் சமயபுரத்தில் நேற்று நடந்தது.

துணை முதல்வர் உதயநிதி, பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி பேசியதாவது:

ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் அவசியம். வீட்டுடன் கூடிய இடம், பட்டாவுடன் வேண்டும் என்பது சவாலாக உள்ளது.

பட்டா என்பது உங்கள் கோரிக்கை அல்ல; உங்கள் உரிமை. மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பது முதல்வரின் லட்சியம்.

அமைச்சர் தலைமையில், கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. அதில், சென்னையில், 1.40 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. தமிழகம் முழுதும் இதுவரை, 19 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது.

அரசை தேடி மக்கள் வந்த நிலை மாறி, மக்களை தேடி அரசு வர வேண்டும் என்ற நிலையை, முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி உள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால், 11.19 சதவீத வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. மக்களுக்கு துணையாக இந்த அரசுக்கு, நீங்கள் துணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி பேசினார்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதியை, மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

விழாவில், அமைச்சர்கள் முத்துசாமி, ராமச்சந்திரன், சுப்பிரமணியன், கூடுதல் தலைமை செயலர் அமுதா, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன், கவுன்சிலர்கள் ேஹமலதா, ரமணி மாதவன், செல்வகுமார், சங்கர் கணேஷ், ஸ்டாலின், செல்வி ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us