Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழை பாதிப்புகள்

 மழை பாதிப்புகள்

 மழை பாதிப்புகள்

 மழை பாதிப்புகள்

ADDED : டிச 02, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
ஏரிகளுக்கு நீர்வரத்து: ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2,530 கனஅடி, புழலுக்கு 4,167, சோழவரத்திற்கு 1,605, செம்பரம்பாக்கத்திற்கு 1,444 கனஅடி நீர்வரத்து கிடைத்தது. இருப்பினும், ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றும் அளவை நீர்வளத்துறை அதிகரிக்கவில்லை.

ஏற்கனவே நீர்இருப்பு குறைக்கப்பட்டுள்ளதால், பூண்டியில் இருந்து வினாடிக்கு 500, புழலில் 200, செம்பரம்பாக்கத்தில் இருந்து வினாடிக்கு 194 கனஅடி மட்டுமே நீர் திறக்கப்பட்டது.

தேர்வு ஒத்திவைப்பு: சென்னை பல்கலையில் இன்று காலை மற்றும் மதியம் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள், கனமழை காரணமாக, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளக்காடான சாலைகள்: சென்னையில் நேற்று பெய்த மழையால், பிரதான சாலைகள் மட்டுமின்றி, உட்புற சாலைகளிலும் தண்ணீர் தேங்கி, குடியிருப்பு மக்கள் அவதிப்பட்டனர். கோயம்பேடு, தேனாம்பேட்டை, பல்லாவரம், அண்ணா நகர், அசோக் நகர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

கார்கள் சேதம்: மதியம் வீசிய பலத்த காற்றால் ரா ஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில், அவ்வழியாக சென்ற காரும், நின்ற காரும் சேதமடைந்தது. வேளச்சேரியில் வலுவி ழந்து நின்றமரம், பலத்த காற்றில் மு றிந்து கார் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதேபோல், மரம் விழுந்ததில் சாந்தோம் சி.எஸ்.ஐ., பிரைமரி பள்ளி சுற்றுச்சுவர் உடைந்தது. அண்ணா நகர் முதலாவது பிரதான சாலைகளில், நான்கு மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலுக்கு செல்ல தடை: மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 'டிட்வா' புயல் வலுவிழந்திருந்தாலும் இன்று காற்று வீசும், மழை இருக்கும் என்பதால், இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

கழிவுநீர் கலப்பு: வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டு மதுரவாயல் ராஜீவ் காந்தி நகரில் எம்.ஜி.ஆர்., சாலை உள்ளது. இப்பகுதியில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால், சுகாதார சீர்கேடு நிலவியது. சென்னீர்குப்பம் பகுதியிலும் இதே பிரச்னை இருந்தது. தி.நகர் மேம்பாலத்தில் இருந்து பசுல்லா சாலை சந்திப்பு வரை உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து, கருமை நிறத்தில் இருந்த து.

வடிகால்வாயால் பிரச்னை: சோழிங்கநல்லுார் மண்டலத்தில், துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி பகுதியில் பல வடிகால்வாய்கள் இணைப்பு இல்லாததால், நீரோட்டம் தடைபட்டு பல இடங்களில் வெள்ளம் தேங்கியது. அடையாறு மண்டலத்தில், வேளச்சேரி - தரமணி சாலையில் வடிகால்வாயை முறையாக துார்வாராததால், அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் சாலையில் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளங்களில் சிக்கிய வாகனங்கள்: பூந்தமல்லி அருகே வேலப்பன்சாவடியில், குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூடாததால், அங்கு மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது. அவ்வழியே சென்ற தனியார் தொழிற்சாலை பேருந்து, கார் ஆகியவை பள்ளத்தில் சிக்கிக்கொண்டன. கிரேன் மூலம் அந்த பேருந்து மீட்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலையில், நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் சிக்கியது. வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில் 5 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியதால், பள்ளம் இருப்பது தெரியாமல் சென்ற இருசக்கர வாகனங்கள், அதில் சிக்கின.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்: பெருங்குடி, பிள்ளையார் கோவில் தெருவில், சில வீடுகளில் மழைநீர் உட்புகுந்தது. கோடம்பாக்கம் சுப்பிரமணி நகர் மற்றும் அதன் பிரதான மற்றும் குறுக்கு தெருக்கள், பராங்குசபுரம், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. கொரட்டூர், கிழக்கு நிழற்சாலையில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் நின்றது. பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில் மழைநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் திக்குமுக்காடினர்.

மூழ்கிய பஸ் நிலையங்கள்: பெரம்பூர், வடபழனி, தி.நகர், பிராட்வே, திருவொற்றியூர், மண லி, ஆவடி, அம்பத்துார், பெரம்பூர், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட பணிமனைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்தள பேருந்துகளின் இயக்கம் சற்று குறைக்கப்பட்டது. இருப்பினும், போதிய அளவில் மற்ற பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் பயணியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us