Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விடாத மழையிலும் வரச்சொன்னதால் பள்ளி குழந்தைகள் பரிதவிப்பு! மோசமான சாலைகளில் தடுக்கி விழுந்து சென்ற அவலம்

 விடாத மழையிலும் வரச்சொன்னதால் பள்ளி குழந்தைகள் பரிதவிப்பு! மோசமான சாலைகளில் தடுக்கி விழுந்து சென்ற அவலம்

 விடாத மழையிலும் வரச்சொன்னதால் பள்ளி குழந்தைகள் பரிதவிப்பு! மோசமான சாலைகளில் தடுக்கி விழுந்து சென்ற அவலம்

 விடாத மழையிலும் வரச்சொன்னதால் பள்ளி குழந்தைகள் பரிதவிப்பு! மோசமான சாலைகளில் தடுக்கி விழுந்து சென்ற அவலம்

UPDATED : டிச 02, 2025 07:53 AMADDED : டிச 02, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடாமல் மழை கொட்டிய நிலையிலும், நேற்று விடுமுறை அறிவிக்கப்படாததால், பள்ளி குழந்தைகள் அவதிக்குள்ளாகினர். குண்டும், குழியுமான படுமோசமான நிலையில் இருந்த சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்ததால், அதில் தடுக்கி விழுந்து, பள்ளிக்கு சென்று திரும்புவதில் குழந்தைகள் சிரமப்பட்டனர். வங்கக்கடலில் உருவான, 'டிட்வா' புயல் வலுவிழந்தபோதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது.

நேற்று மட்டும், சென்னையில் சராசரியாக, 10 செ.மீ.,க்கு மேல் கனமழை பதிவாகியது. அதிகபட்சமாக எண்ணுாரில், 12 செ.மீ., மழை பதிவாகி இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னையில், 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள், மழைநீர் வண்டல் வடிதொட்டிகளில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து நீரை வெளியேற்றினாலும், தொடர் மழையால் மழைநீர் தேக்கம் காணப்பட்டது.

பெரும்பாலான சாலைகளை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், குண்டும் குழியுமான பல சாலைகளில் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

நேற்று முன்தினம் முதலே மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

குறிப்பாக, காலையில் பல இடங்களில் கனமழை பெய்தபோதும், விடுமுறை அறிவிக்கப்படாததால், குழந்தைகளை பெற்றோர், நடந்தும், வாகனங்களிலும் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். சிலர், பலத்த காற்று அடித்தபோதும், கொட்டும் மழையில் சைக்கிளில் சென்று அவதிக்குள்ளாகினர்.

முழங்கால் வரை மழைநீர் தேங்கிய நிலையில், சாலையும் குண்டும், குழியுமாக இருந்ததால், பள்ளம், மேடு தெரியாமல், பள்ளி குழந்தைகளுடன் கீழே விழுந்து அடிபட்டனர். சிலருக்கு கை, கால்கள், கன்னங்களில் காயங்கள் ஏற்பட்டன.

மேலும், மழை காரணமாக குளிர்காற்று வீசியதால், வகுப்பறையில் உட்கார முடியாமல் பள்ளி குழந்தைகள் அவதிக்குள்ளாகினர்.

தொடர் மழை பெய்து வந்ததால், சில தனியார் பள்ளிகளில், மதியம் 2:00 மணியளவில், பெற்றோரை அழைத்து, மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம், மாநகராட்சி பள்ளிகள், வழக்கமான பள்ளி நேரம் வரை இயங்கின.

மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு காரணமாக, மாணவ - மாணவியர் மற்றும் சிறு குழந்தைகள் பள்ளிக்கு வரும்போதும், வீட்டிற்கு செல்லும்போதும் நனைந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து, சென்னை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையை பொறுத்தவரை, எந்த முடிவு எடுக்க வேண்டுமென்றாலும், முதல்வர், துணை முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கேட்டபோது, அங்கிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

அதனால், மாவட்ட நிர்வாகமும் என்ன செய்வது என தெரியாமல், விடுமுறை அறிவிப்பை வெளியிடாமல் தாமதப்படுத்தியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகார போட்டியா?

மழை பெய்ய வாய்ப்பு என, வானிலை மையம் அறிவித்து, அன்று முழுதும் வெயில் வாட்டும் நிலையில்கூட விடுப்பு அளிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்தும், நேற்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுப்பு அளிக்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பேரிடர் காலங்களில் சூழலுக்கு ஏற்ப, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிப்பது என்பது, அந்தந்த மாவட்ட கலெக்டரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என, அரசு ஏற்கனவே அறிவித்தது. ஆனால், சென்னை தலைநகர் என்பதால், தமிழகத்தின் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களின் கைகளிலே இருப்பதாக தெரிகிறது. அதனால், விடுப்பு அளிப்பதற்கான மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரம் பறிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us