/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெருங்குடியில் குடிநீர் குழாய் உடைப்பால் நள்ளிரவில் வெள்ளக்காடான தெருக்கள்பெருங்குடியில் குடிநீர் குழாய் உடைப்பால் நள்ளிரவில் வெள்ளக்காடான தெருக்கள்
பெருங்குடியில் குடிநீர் குழாய் உடைப்பால் நள்ளிரவில் வெள்ளக்காடான தெருக்கள்
பெருங்குடியில் குடிநீர் குழாய் உடைப்பால் நள்ளிரவில் வெள்ளக்காடான தெருக்கள்
பெருங்குடியில் குடிநீர் குழாய் உடைப்பால் நள்ளிரவில் வெள்ளக்காடான தெருக்கள்
ADDED : ஜன 28, 2024 12:51 AM

பெருங்குடி, சென்னை மாநகராட்சி, வார்டு 184க்கு உட்பட்டது பெருங்குடி. இங்கு டெலிபோன் நகர், வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் 45 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக 2,500 வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இரு தினங்களுக்கு முன், குடிநீர் செல்லும் 800 மி.மி., விட்டம் உள்ள குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்ட நிலையில், குடிநீர் வாரியம் வாயிலாக கசிவு சரிசெய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, குழாயில் அதே இடத்தில் மீண்டும் நீர்க்கசிவு ஏற்பட்டது.
இதுகுறித்து, குடிநீர் வாரியத்திற்கு பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். விடுமுறை நாள் என்பதால், குடிநீர் வாரியம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், தொடர் அழுத்தம் காரணமாக குழாயில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி, நேற்று அதிகாலை குழாய் முழுதும் உடைந்து, மேல்நிலை குடிநீர்த்தொட்டியில் இருந்த 45 லட்சம் லிட்டர் தண்ணீரும் டெலிபோன் நகரில் உள்ள சில தெருக்களில் பாய்ந்தோடியது.
இதனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதமாகின. தவிர, நீர் அரிப்பு காரணமாக, அருகிலிருந்த மின்மாற்றியும் சாய்ந்து விழுந்தது.
உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருவதால், சாலையோர பள்ளத்தில் எவரும் விழாதபடி, தடுப்பு அமைக்கப்பட்டது.
இதையடுத்து மின் மாற்றியையும், உடைந்த குழாயையும் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் நேற்று மாலை மின் வினியோகம் செய்யப்பட்டது. குழாய் சீரமைக்கும் பணி முடிந்த உடன் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவிர, பொதுமக்களின் உடைமைகள் சேதமானது குறித்து ஆய்வு செய்யப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.