/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.50 லட்சம் நிலமோசடி பெண் உட்பட மூவர் கைது ரூ.50 லட்சம் நிலமோசடி பெண் உட்பட மூவர் கைது
ரூ.50 லட்சம் நிலமோசடி பெண் உட்பட மூவர் கைது
ரூ.50 லட்சம் நிலமோசடி பெண் உட்பட மூவர் கைது
ரூ.50 லட்சம் நிலமோசடி பெண் உட்பட மூவர் கைது
ADDED : செப் 18, 2025 12:38 AM

ஆவடி போலி ஆவணங்கள் வாயிலாக, நில மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
நந்தம்பாக்கம், கணபதி காலனியைச் சேர்ந்தவர் ராஜி, 53. இவர், கடந்த 1985ல், அவரது அம்மா ராஜேஸ்வரி அம்மாளுடன் சேர்ந்து, பழஞ்சூர், ஸ்ரீராம் நகரில், சர்வே எண் 40ல், 5.33 சென்ட் நிலத்தையும், சர்வே 51ல், 5 சென்ட் நிலத்தையும் கிரையம் பெற்று அனுபவித்து வந்துள்ளார்.
கடந்த 2018ல், ராஜேஸ்வரி அம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த 2023ல், நிலத்தை சென்று பார்த்த போது, அவரது தாயார் பெயரில் இருந்த சர்வே எண் 40 மனையை சுற்றி, முள்வேலி போட்டு குடிசை போடப்பட்டு இருந்தது.
வில்லங்க சான்று சரிபார்த்தபோது, போலியான ஆவணங்கள் தயார் செய்து, கடந்த 2024ல், ஆனந்தி என்பவர் பெயரில் தான செட்டில்மென்ட் செய்தது தெரிந்தது.
அந்த தான செட்டில்மென்ட் ஆவணத்தில், மோகன் என்பவரின் மகள்கள் நதியா மற்றும் காயத்ரி இருவரும், சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர்.
அதேபோல், சர்வே எண் 51ல், செந்தில் குமார் என்பவர் ஆக்கிரமித்து, அந்த நிலத்திற்கு செல்லும் பாதையில் வீடு கட்டியுள்ளார். எனவே, 50 லட்சம் ரூபாய் நிலத்தை மீட்டு தருமாறு, கடந்த ஆண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில், ராஜி புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், 67, பூந்தமல்லி, செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி, 38, மற்றும் செந்தில்குமார், 48, ஆகியோரை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.