/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புலம் பெயர் தொழிலாளர்களுக்கு...ரேஷன் கார்டு! தொழில் நிறுவனங்கள் உதவலாம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு...ரேஷன் கார்டு! தொழில் நிறுவனங்கள் உதவலாம்
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு...ரேஷன் கார்டு! தொழில் நிறுவனங்கள் உதவலாம்
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு...ரேஷன் கார்டு! தொழில் நிறுவனங்கள் உதவலாம்
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு...ரேஷன் கார்டு! தொழில் நிறுவனங்கள் உதவலாம்
ADDED : ஜூலை 17, 2024 12:13 AM
மேட்டுப்பாளையம்: 'இ-ஷ்ரம்' இணையதளத்தில் பதிவு செய்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. தொழில் நிறுவன உரிமையாளர்கள் இது தொடர்பாக தங்களது நிறுவனத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என தேசிய தரவு தளத்தை உருவாக்குவதற்காக, 'இ-ஷ்ரம்' என்னும் இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்களின் விபரங்கள், ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பெயர், தொழில், முகவரி, தொழில் வகை, கல்வித் தகுதி, திறன் வகைகள் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. வடமாநிலங்களில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வேலைக்காக செல்லும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, அந்தந்த மாநிலங்களிலே 'இ-ஷ்ரம்' அட்டையாள அட்டைகளை வழங்கி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அசாம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பீகார், உத்திர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்தவர்களாக உள்ளனர்.
ரேஷன் கார்டு இல்லாத புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, ரேஷன் கார்டு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களில், இதுவரை ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் நீண்ட நாட்களாக கோவை மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்க வட்டார வழங்கல் அதிகாரிகள் தாலுகா வாரியாக கள ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விண்ணப்பமும் வட்டார அளவிலான அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
இதை முழுவதுமாக கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளால், தற்போது மாவட்டத்தில் இரண்டு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் இங்கு வசித்து வரும் பட்சத்தில், ரேஷன் கார்டு இல்லாத நிலையில், அவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெற உடனடியாக வட்டார வழங்கல் துறை அதிகாரிகளை அணுகலாம்.
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதுகுறித்து வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ரேஷன் கார்டு பெற்று தர உதவி புரிந்திட வேண்டும்.
கோவை மாவட்டத்தில் இதுவரை 2 தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றனர்.---