Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குருவிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததால் எங்களுக்கு ஒரு வீடு கட்ட முடிந்தது சாதனை பெண்ணைப் பற்றிய செய்தி...

குருவிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததால் எங்களுக்கு ஒரு வீடு கட்ட முடிந்தது சாதனை பெண்ணைப் பற்றிய செய்தி...

குருவிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததால் எங்களுக்கு ஒரு வீடு கட்ட முடிந்தது சாதனை பெண்ணைப் பற்றிய செய்தி...

குருவிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததால் எங்களுக்கு ஒரு வீடு கட்ட முடிந்தது சாதனை பெண்ணைப் பற்றிய செய்தி...

ADDED : ஜூலை 16, 2024 11:09 PM


Google News
மேட்டுப்பாளையம்;குருவிகளுக்கு இருக்க நான் கூடுகள் செய்து கொடுத்தேன். அதில் கிடைத்த வருவாயில் நானும் சிறிய வீடு கட்டியுள்ளேன் என, 62 வயதான பெண்மணி தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் அருகே குட்டையூர் மாதேஸ்வரன் மலை செல்லும் சாலையில், மாராத்தாள், 62 என்ற பெண் வசித்து வருகிறார். இவர் குருவிகளுக்கு விதவிதமான கூடுகள் செய்து கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

குடிசை வீட்டில் இருந்து கொண்டு, நானும், எனது கணவரும் கூலி வேலைக்கு செய்து, அதில் கிடைத்த வருவாயை வைத்து, குடும்பம் நடத்தி வந்தோம். கடைகளுக்கு பொருள் வாங்க செல்லும்போது, பல கடைகளில் குருவிக்கூடுகள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தேன். இந்த மாதிரி கூடுகளை நாமும் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். முதலில் ஒரு கூட்டை வாங்கி எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என பார்த்தேன். அந்த உருண்டையான கூண்டு வடிவம் வரவும், உள்பகுதியில் காலியாக இருக்க, என்ன பொருள் வைப்பது என்று தெரியாமல் இருந்தேன். இறுதியில் கெட்டியான பலூனை ஊதி, அதன் மீது தேங்காய் மட்டை நாரை வைத்து, அதன் மீது நூலால் சுற்றி, மைதா மாவு தடவி, வெயிலில் காயவைத்து வைத்தால், உருண்டையாக வந்தது. அதன் பிறகு ஏதாவது ஒரு இடத்தில் ஓட்டை போட்டு, உள்ளே இருக்கும் பலூனை உடைத்து வெளியே எடுத்தால், உள் பகுதி மெது, மெதுவாக இருந்தது. குருவிகள் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க வசதியான பகுதியாக உள்ளது.

ஒரு குருவி, இரண்டு குருவிகள் தங்குவதற்கு என, தனித்தனியாக கூடுகள் செய்யப்படுகிறது. தினமும், 50 கூடுகள் செய்ய முடிகின்றன. இது இல்லாமல் பி.வி.சி., பைப்புகளிலும், சுரைக்காய், மயில் போன்ற வடிவிலும் கூடுகள் செய்து கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறேன். ஆண்டு முழுவதும் கூடுகள் செய்வதால், நல்ல வருவாய் கிடைக்கிறது. தரமான கூடுகள் என்பதால், அதிகமான ஆர்டர்கள் எங்களுக்கு, கிடைக்கிறது.

முதலில் குடிசை வீட்டில் குடியிருந்தோம். கூடுகள் செய்த வருவாயில், சிமெண்ட் சீட் வீடாக மாற்றினோம். அதை இடித்துவிட்டு கான்கிரீட் டெரஸ் வீடாக தற்போது கட்டியுள்ளோம். குருவிகளுக்கு வீடுகள் (கூடுகள்) கட்டிக் கொடுத்ததன் வாயிலாக கிடைத்த வருவாயால், நாங்கள் குடியிருக்க நல்ல வீடு ஒன்று கட்டியுள்ளோம். ஏராளமான பெண்களுக்கு கூடுகள் செய்வது குறித்து பயிற்சி அளித்துள்ளேன். விரும்பும் பெண்களுக்கு பயிற்சியும் அளிக்க உள்ளேன். பெண்கள் கைத்தொழில் செய்ய முன்வர வேண்டும் என்கிறார் அந்த பெண்.

பலூன் ஊதுவதால்

தைராய்டு நோய் பறந்தது

குருவிகளுக்கு கூடுகள் செய்வதற்கு முன், எனக்கு தைராய்டும், இருதய நோய் பிரச்னையும் இருந்தது. அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகளை வாங்கி, தினமும் சாப்பிட்டு வந்தேன். இந்நிலையில் தினமும், 50க்கும் மேற்பட்ட பலூன்களை வாயால் ஊதி, கூடுகள் செய்து வந்தேன். நாள்பட தைராய்டு பிரச்னையும், இருதய நோய் பிரச்னைக்கும் தீர்வு கிடைத்தது. மூச்சை தம் கட்டி ஊதுவதால் தைராய்டும், இருதய நோயும் குணமாகி இருக்கும் என, நான் நம்புகிறேன்.

______

படங்கள் திரு பாலாஜி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us