ADDED : ஜூன் 19, 2025 05:31 AM

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை சிறுத்தை தாக்கி கொன்றதா என்று கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே சுக்கு காப்பி கடை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 60. விவசாயி. இவர் காரமடை அருகே நஞ்சப்பா நகர் பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இதனிடையே தோட்டத்தில் மேய்ச்சலுக்காக 6 பசு மாடுகளை நேற்று முன்தினம் இவர் அனுப்பிய நிலையில், ஐந்து மாடுகள் மட்டுமே திரும்பி வந்தது.
இதனிடையே ஒரு பசுமாட்டை காணவில்லை என அவர் தேடிய போது, மாடு மர்ம விலங்கு தாக்கி உயிரிழந்து கிடந்தது நேற்று தெரிய வந்தது. இதையடுத்து, காரமடை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பசுமாட்டை தாக்கியது எந்த விலங்கு என்ன கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
இது குறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், பசுமாட்டை தாக்கி கொன்றது சிறுத்தையா அல்லது வேறு எதாவது வனவிலங்கா என ஆய்வு செய்து வருகிறோம். கண்காணிப்பு கேமராவில் எந்த விலங்கின் நடமாட்டமும் இதுவரை சிக்கவில்லை, என்றார்.