ADDED : ஜூன் 19, 2025 05:32 AM
அன்னுார்: நூறு நாள் வேலைத்திட்டத்தில், ஒரு நிதி ஆண்டில் செய்யப்பட்ட பணிகள் அடுத்த நிதியாண்டில், சமூக தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்படுகிறது. பின்னர் அதில் கண்டறியப்படும் ஆட்சேபனைகள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் அ. மேட்டுப்பாளையம் ஊராட்சியில், 59 லட்சத்து 18 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பில், 24 பணிகள் செய்யப்பட்டன. இப்பணிகளை, வட்டார வள அலுவலர் இம்மானுவேல் தலைமையில் தணிக்கையாளர்கள், ஆய்வு செய்தனர். செய்யப்பட்ட பணிகளை அளவீடு செய்தனர். தொழிலாளர்களின் வேலை அட்டைகளை பரிசோதித்தனர். சம்பளம் வழங்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இன்று தணிக்கை அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. நாளை (20ம் தேதி) காலை 11:00 மணிக்கு அ. மேட்டுப்பாளையம் புதிய ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் தணிக்கை அறிக்கை வாசிக்கப்படும்.
இக்கூட்டத்தில் கிராம மக்கள் பங்கேற்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.