/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீட் தேர்வில் அரசு, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை! ஏழை மாணவர்களும் டாக்டர் ஆகலாம் நீட் தேர்வில் அரசு, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை! ஏழை மாணவர்களும் டாக்டர் ஆகலாம்
நீட் தேர்வில் அரசு, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை! ஏழை மாணவர்களும் டாக்டர் ஆகலாம்
நீட் தேர்வில் அரசு, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை! ஏழை மாணவர்களும் டாக்டர் ஆகலாம்
நீட் தேர்வில் அரசு, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை! ஏழை மாணவர்களும் டாக்டர் ஆகலாம்
ADDED : ஜூன் 19, 2025 05:47 AM

கோவை, : மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், கோவை மாவட்ட அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 1,387 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 17 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. 2024 -2025ம் ஆண்டுக்கான நீட் தேர்வில், கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் இருந்து 498 மாணவர்களும், மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 43 மாணவர்களும் பங்கேற்றனர்.
இதில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த 78 மாணவர்களும், மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களும், மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர். சாதித்த மாணவ மாணவியருக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிறப்பு பயிற்சி திட்டம்
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
மாநகராட்சி பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயின்ற 144 மாணவர்களுக்கு, நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 43 மாணவர்கள் தேர்வில் பங்கேற்று, 8 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தகுதியானவர்கள் மருத்துவக் கல்வியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், வரும் கல்வியாண்டு முதல், நீட் தேர்வுக்கான பயிற்சியை ஆரம்பம் முதலே வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இருந்து, மருத்துவக் கல்விக்குள் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
'கவனமுடன் படித்தேன்'
''பிளஸ் 1 முதல் நீட் தேர்வுக்கு தயாராகத் தொடங்கினேன். எனினும், பிளஸ் 2வின் போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், முழு கவனத்துடன் பயின்றதால், நல்ல மதிப்பெண் பெற முடிந்தது.
- மணிகண்டன், மாதிரி பள்ளி, ஆர்.எஸ்.புரம்.
'கனவு நிறைவேறியது'
''மருத்துவம் படிக்க வேண்டும் என்பது என் கனவு. அதனால், நீட் தேர்வில் அதிக கவனம் செலுத்தினேன். முதல் முயற்சியில் மருத்துவப் படிப்புக்கு தகுதிப் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கனவு நிறைவேறியது,''
- தனலட்சுமி
அரசு மேல்நிலைப்பள்ளி, அசோகபுரம்.
'முதல் முயற்சியால் பெருமை'
''பிளஸ் 1 தொடக்கம் முதலே, பொதுத்தேர்வுக்கும், நீட் தேர்வுக்கும் ஒருசேர தயார் செய்தேன். மாநகராட்சி சார்பில் நடைபெற்ற, சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்று, முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றதில் பெருமையாக உள்ளது,''
- நவ்பியா, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒப்பணக்கார வீதி.
'பள்ளி பயிற்சியால் வெற்றி'
''பள்ளி சார்பில் நடத்தப்பட்ட நீட் சிறப்பு வகுப்புகளில் முழு கவனத்துடன் படித்தேன். மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்ததன் விளைவாக, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றேன்,''
- சாதனா, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வடகோவை.
'தொடர் பயிற்சியால் வெற்றி'
''இது எனது இரண்டாவது முயற்சி. தொடர்ந்து நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டேன். தொடர் பயிற்சி செய்ததால், இந்த முறை தேர்வில் வெற்றி பெற முடிந்தது,''
- ஜனனி
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மேற்கு.