Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீட்டை இழந்து தவிக்கும் மக்கள்... கண்ணீர் விடும் கனவு இல்லம் ; கூட்டுறவு வங்கி கடன் வழங்கவில்லை

வீட்டை இழந்து தவிக்கும் மக்கள்... கண்ணீர் விடும் கனவு இல்லம் ; கூட்டுறவு வங்கி கடன் வழங்கவில்லை

வீட்டை இழந்து தவிக்கும் மக்கள்... கண்ணீர் விடும் கனவு இல்லம் ; கூட்டுறவு வங்கி கடன் வழங்கவில்லை

வீட்டை இழந்து தவிக்கும் மக்கள்... கண்ணீர் விடும் கனவு இல்லம் ; கூட்டுறவு வங்கி கடன் வழங்கவில்லை

ADDED : ஜூன் 19, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம் : மத்திய கூட்டுறவு வங்கி கடன் கிடைக்காததால், கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்டி முடிக்காமல் பாதியில் நின்றுள்ளன. இதனால் இருந்த வீட்டையும் இழந்து, மக்கள் தவிக்கின்றனர்.

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு, தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள் ஆகியவை கட்டுவதற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்தது.

அந்த தொகையில் பயனாளிகள், வீடுகளை கட்டியும், பற்றாக்குறைக்கு அவர்கள் சேமிப்பில் இருந்தோ, கடன் பெற்றோ வீடுகளை கட்டி முடித்து, வசித்து வருகின்றனர். ஆனால் தி.மு.க., அரசு, தொகுப்பு மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கு பதிலாக, 'கலைஞர் கனவு இல்லம்' என்ற திட்டத்தை அறிவித்தது.

ஒவ்வொரு வீட்டிற்கும், 3.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்க, எவ்வித பிணையம் இல்லாமல், மத்திய கூட்டுறவு வங்கியில், ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்கப்படும், என, தமிழக அரசு உத்தரவிட்டது. காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள, 17 ஊராட்சிகளில், 300-க்கும் மேற்பட்ட கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வீடு, 360 சதுர அடியில், ஒரு ஹால், பெட்ரூம், சமையல் அறை, சிட்அவுட் ஆகியவை கட்ட வேண்டும். பல ஊராட்சிகளில், கான்கிரீட் போட்ட நிலையில், அதற்கு மேல் கட்டுவதற்கு பணம் இல்லாததால், பயனாளிகள் வீடுகள் கட்ட முடியாமல், பணிகளை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

பெள்ளாதி ஊராட்சி, அண்ணா நகர் மக்கள் கூறியதாவது: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், முன் பணம் போட்டு பேஸ் மட்டம் கட்டினோம். அதை பார்த்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், 75 ஆயிரம் ரூபாயை, எங்களுடைய வங்கிக் கணக்குக்கு அனுப்பினர். அதைத் தொடர்ந்து லிண்டல் மற்றும் ரூப் கான்கிரீட் போட்டவுடன் இரண்டு மற்றும் மூன்றாவது தவணையும் வழங்கினர். அதற்கு மேல் வீடுகளை, முழுமையாக கட்டி முடிக்க, பணம் தேவைப்படுகிறது.

தமிழக அரசு அறிவித்தபடி, மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் தொகை வேண்டி, வங்கியில் ஆயிரம் ரூபாய் கட்டி கணக்கு துவக்கினோம். ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் வங்கியில் கடன் வழங்கவில்லை.

வங்கிக்கு சென்று அதிகாரிகளை கேட்டால், உங்களுக்கு கடன் கொடுப்பதாக யார் சொன்னார்கள். கடன் தொகை ஒதுக்கீடு செய்யும் போது, உங்களுக்கு தகவல் தருவோம் என கூறி, அனுப்பி விட்டனர். அதனால் தொடர்ந்து வீடுகள் கட்ட முடியாமல், குடியிருந்த வீட்டையும் இடித்துவிட்டு, வீடு இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறோம்.

இப்பகுதி மக்கள் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். அதனால் போதிய அளவு பணம் இல்லாததால், தொடர்ந்து வீடு கட்ட முடியாமல் பாதியில் நிற்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம், வங்கியில் கடன் தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.

இது குறித்து பெள்ளாதி ஊராட்சி முன்னாள் தலைவர் பூபதி குமரேசன் கூறுகையில்,'மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரு லட்ச ரூபாய் பிணையம் இல்லாமல் கடன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதை நம்பி வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் வங்கியில் கடன் வழங்காததால், வீடுகள் கட்டி முடிக்க முடியாமல், பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். எனவே தமிழக அரசு கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு, கூடுதல் நிதி ஒதுக்க ஆவன செய்ய வேண்டும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us