/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்
ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்
ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்
ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்
ADDED : செப் 25, 2025 11:52 PM

வால்பாறை; வால்பாறை மலைப்பாதையில் செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறையிலிருந்து, ரொட்டிக்கடை, அய்யர்பாடி, அட்கட்டி, ஆழியார் வழியாக பொள்ளாச்சி ரோட்டில், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த ரோட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
குறிப்பாக கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதே போல் வால்பாறையிலிருந்து மாணிக்கா, பழைய வால்பாறை வழியாக சோலையாறு டேம் பகுதிக்குள் நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், ஆழியாறிலிருந்து வால்பாறை வரும் ரோட்டிலும், வால்பாறையிலிருந்து சோலையாறுடேம் செல்லும் ரோட்டின் இருபுறமும், செடிகள் காடுபோல் முளைத்துள்ளதால், ரோடு இருக்கும் இடம் தெரியாமலும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருப்பதால், வால்பாறை மலைப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்படுகிறது.
வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது:
'வால்பாறையில் தற்போது மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், பனி மூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் ரோட்டை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாவாகனங்கள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை மலைப்பாதையில் உள்ள செடிகள் முழுமையாக வெட்டப்படாமல் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதே போல் வால்பாறையிலிருந்து சோலையாறுடேம், சின்கோனா, குரங்குமுடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் செடிகள் அதிக அளவில் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக செடிகளை அகற்ற வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,'வால்பாறையில் கடந்த சில வாரங்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. இருப்பினும் வடகிழக்குப்பருவ மழையும் விரைவில் துவங்கவுள்ளதால், சாலையோர ஆக்கிரமிப்பு செடிகள் வெட்டுவதில் சிரமம் உள்ளது. மழைக்கு பின் வால்பாறை மலைப்பகுதியில் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ள செடிகள் வெட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.