ADDED : ஜூலை 17, 2024 12:38 AM
கடலுார் கைத்தறி மற்றும் துணிநுால் உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் கடலுார், விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் சுமார் 60 கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கங்கள் இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
கைலி, கொசுவலை உள்ளிட்ட ரகங்களை அதிகளவு நெசவு செய்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கைத்தறி நெசவுக்கு மாற்று என, மினி பவர்லுாம் (பெடல் லுாம்) ரக தறிகளை கைத்தறித்துறை அறிமுகப்படுத்தியது.
இந்த தறிகளை நெசவாளர்களுக்கு இலவசமாக அரசு வழங்கியது. இலவச தறி கிடைக்காத பலர், பல லட்சம் செலவு செய்து விலைக்கு வாங்கினர். வாங்க முடியாதவர்கள் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். பெடல்லுாம் தறிகளில் பள்ளி மாணவர்களின் சீருடை, இலவச வேட்டி, சேலை ரகங்களை உற்பத்தி செய்து வந்தனர். இந்நிலையில், அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட கமிஷன் பிரச்னையில், 4 மாதங்களாக சரிவர வேலையில்லாமல் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், கைத்தறி நெசவாளர் சங்கத்தில், நெசவாளர்கள் உற்பத்தி செய்யாமலேயே உற்பத்தி செய்தது போல் கணக்கு காட்டிவிட்டு, பவர்லுாம் தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலை ரகங்களை அதிகாரிகள் வாங்கி ஸ்டாக் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கைத்தறி என பெயர் வைத்துக்கொண்டு, கைத்தறியை முற்றிலும் அழிப்பதாக, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, கைத்தறி சங்கங்களில் தணிக்கைக்குழு அமைத்து ஆய்வு செய்து, குறைகளை களைய வேண்டும் என்றும், நெசவாளர்களையும், நெசவு தொழிலையும் காப்பாற்ற, அரசு முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.