Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை செய்து எரிப்பு நெல்லிக்குப்பத்தில் இரு வாலிபர்கள் கைது கஞ்சா போதையில் வெறிச்செயல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை செய்து எரிப்பு நெல்லிக்குப்பத்தில் இரு வாலிபர்கள் கைது கஞ்சா போதையில் வெறிச்செயல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை செய்து எரிப்பு நெல்லிக்குப்பத்தில் இரு வாலிபர்கள் கைது கஞ்சா போதையில் வெறிச்செயல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை செய்து எரிப்பு நெல்லிக்குப்பத்தில் இரு வாலிபர்கள் கைது கஞ்சா போதையில் வெறிச்செயல்

ADDED : ஜூலை 20, 2024 04:24 AM


Google News
Latest Tamil News
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொலை செய்து எரித்த வழக்கில், இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து, ஆயுதங்கள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி கமலீஸ்வரி, 60. இவரது வீடு கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை பூட்டியிருந்த நிலையில், துர்நாற்றம் வீசியது.

தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கமலீஸ்வரி, அவரது இளைய மகன் சுமந்த்குமார்,37; இவரது மகன் இசாந்த், 8; ஆகியோர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து, சுமந்த்குமார் வேலை செய்த இடங்கள், அவரது இரண்டாவது மனைவி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில், கமலீஸ்வரி வீட்டின் பக்கத்து தெருவை சேர்ந்த பழனி மகன் சங்கர்ஆனந்த்,21; கொலை நடந்த நாள் முதல் தலைமறைவானது தெரியவந்தது.

சென்னையில் இருந்த சங்கர்ஆனந்த் மற்றும் நெல்லிக்குப்பத்தில் இருந்த அவரது நண்பர் முகமது அலி மகன் சாகுல் அமீது,20; ஆகியோரை நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அப்போது சங்கர் ஆனந்த், போலீசாரிடம் கூறியதாவது:

எனது தந்தை இரண்டு ஆண்டிற்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தாய் லட்சுமிக்கும், சுமந்த்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் பேசிக் கொண்டனர். இந்நிலையில் என் தாய் 6 மாதங்களுக்கு முன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சுமந்த்குமார் தான் காரணம் என நினைத்து அவர் மீது கொலை வெறியில் இருந்தேன்.

நான் கமலீஸ்வரி வீட்டின் வழியாக செல்லும்போது அவர் என்னை தொடர்ந்து திட்டி வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த நான், சுமந்த்குமார், கமலீஸ்வரியை கொலை செய்ய முடிவு செய்து, எனது நண்பர் சாகுல் அமீதுவிடம் கூறினேன். அவர் என்னை கேலி செய்தார்.

ஆத்திமடைந்த நான், அவர்களை எப்படியும் கொலை செய்ய போகிறேன் என்றார். அதற்கு சாகுல் அமீதும் உடன் வருவதாக கூறினார். அதன்படி கடந்த 12ம் தேதி இருவரும் ஒன்றாக மது குடித்துவிட்டு கஞ்சா அடித்தோம்.

அப்போது, முதலில் என்னை போகச் சொன்ன சாகுல் அமீது, பின்னால் வருவதாக கூறினார். அன்று இரவு கமலீஸ்வரி வீட்டின் வெளியே காருக்கு அருகில் படிக்கட்டு மறைவில் இரண்டு கத்திகளுடன் காத்திருந்தேன். இரவு 12:00 மணிக்கு மேலும் சாகுல்அமீது வரவில்லை.

அதனால் நான் மட்டும் கொலை செய்ய முடிவு செய்து, வீட்டின் கதவை தட்டினேன். கதவை திறந்த சுமந்த்குமார் தலையில் கத்தியால் வெட்டினேன். ரத்த காயத்துடன் உள்ளே சென்ற சுமந்த்குமார் கத்தியை எடுத்து வந்து என்னை வெட்டினார். அதில் என் கைவிரல் ஒன்று துண்டானது. இதனால் அந்த வீட்டின் போர்டிகோவில் ரத்த கரையானது. பின்னர் சுமந்த்குமாரை சரமாரியாக வெட்டினேன். தடுக்க வந்த கமலீஸ்வரியையும் பல இடங்களில் வெட்டி கொலை செய்தேன். சத்தம் கேட்டு வந்த இசாந்த் கூச்சல் போடவே அவனை படுக்கையறைக்கு அழைத்து சென்று தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்தேன். இதில் சாகாவிட்டால் என்ன செய்வது என நினைத்து கத்தியால் வெட்டினேன்.

பின்னர், பீரோவில் இருந்த நகைகளை எடுத்து கொண்டு தோட்டத்து கதவு வழியாக வெளியேறி கதவை சாத்திவிட்டு தப்பினேன். அப்போது பக்கத்து வீட்டின் சுவற்றில் ஏறி தப்பிக்க முயன்ற போது என் கையில் இருந்த ரத்தம் படிந்து கரையானது. அங்கிருந்து சாகுல் அமீது வீட்டுக்கு சென்று ரத்தக்கரை படிந்த ஆடைகளை மாற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.

மறுநாள் 13ம் தேதி கமலீஸ்வரி வீட்டின் வழியே சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்ததால், மூவரும் இறந்ததை உறுதி செய்து கொண்டதை சாகுல் அமீதுவிடம் கூறினேன். அதற்கு அவர், கொலை செய்துவிட்டு அப்படியே வந்து விட்டாய். போலீசார் வந்தால் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். எனவே மூவரையும் எரித்துவிட்டால் தடயம் கிடைக்காது எனக்கூறி, பெட்ரோல் வாங்கி வந்து கொடுத்தார்.

பின் 14ம் தேதி நள்ளிரவு கமலீஸ்வரி வீட்டின் தோட்டத்தின் வழியே உள்ளே சென்று மூவரின் உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு, தோட்டத்து கதவை தாழ்ப்பாள் போட்டேன். பின், முன்பக்கம் வந்து கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சுவர் ஏறி குதித்து வீட்டுக்கு சென்றேன். போலீசார் என்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் சென்னைக்கு சென்றுவிட்டேன் என்றார்.

இதையடுத்து, சங்கர் ஆனந்த்,21; சாகுல் அமீது,20; ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர்.

கொலையாளி

மூவரையும் ஒருவரே எப்படி கொலை செய்தார் என்பதை சம்பவ இடத்தில் செய்து காட்ட போலீசார் சங்கர் ஆனந்தை நேற்று அதிகாலை 2:00 மணிக்கு காராமணிக்குப்பத்திற்கு அழைத்து சென்றனர். முன்னதாக 200க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதி முழுவதும் குவிக்கப்பட்டு, தெருக்களில் பொதுமக்கள் வராதபடி பார்த்துக் கொண்டனர். அதன்பிறகு சங்கர் ஆனந்த், கமலீஸ்வரி வீட்டிற்கு வெளியே பதுங்கியிருந்தது, பின்னர் கொலை செய்து எப்படி என்பதை நடித்து காட்டியுள்ளார்.வீட்டில் சிகரெட் துண்டுகள் மற்றும் மதுபாட்டில்கள் இருந்தது குறித்து கேட்டதற்கு, சுமந்த்குமாருக்கு அந்த பழக்கம் இருப்பதாக கூறியுள்ளார்.கமலீஸ்வரி கழுத்தில் இருந்த நகையை எடுத்திருந்தால், நகைக்காக கொலை செய்ததாக நினைப்பார்கள். அதை எடுக்காவிட்டால் நகை திருடுபோனது யாருக்கும் தெரியாது. எனவே பீரோவில் இருந்த நகைகளை மட்டுமே எடுத்து சென்றதாக கூறியுள்ளார்.



கஞ்சாவால் கொடூரம்

சங்கர் ஆனந்த் மற்றும் ஷாகுல் அமீதுவிற்கு, ஏராளமான நண்பர்கள் உள்ளதால் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகினர். சங்கர் ஆனந்த் பல மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவரது நடவடிக்கையை பிடிக்காமல் அவரது பெற்றோர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். அண்ணன் ஹரி வேலைக்காக சென்னைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக வசித்து வந்த சங்கர் ஆனந்த் எந்த நேரமும் கஞ்சா போதையில் இருந்துள்ளார். இதற்கு பணம் இல்லாததாலும், கமலீஸ்வரி குடும்பத்தினர் மீது இருந்த முன்விரோதத்தாலும், அவர்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.நெல்லிக்குப்பம் பகுதியில் அதிகளவு கஞ்சா மற்றும் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட் விற்பனையை போலீசார் தடுக்காமல் அலட்சியப்படுத்தியதால், மூன்று பேரை ஒருவரே கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us