/உள்ளூர் செய்திகள்/கடலூர்/செராமிக் தொழிற்பேட்டையில் அகல் விளக்கு உற்பத்தி... பாதிப்பு; மூலப்பொருட்களை அரசே நேரடியாக வழங்க கோரிக்கைசெராமிக் தொழிற்பேட்டையில் அகல் விளக்கு உற்பத்தி... பாதிப்பு; மூலப்பொருட்களை அரசே நேரடியாக வழங்க கோரிக்கை
செராமிக் தொழிற்பேட்டையில் அகல் விளக்கு உற்பத்தி... பாதிப்பு; மூலப்பொருட்களை அரசே நேரடியாக வழங்க கோரிக்கை
செராமிக் தொழிற்பேட்டையில் அகல் விளக்கு உற்பத்தி... பாதிப்பு; மூலப்பொருட்களை அரசே நேரடியாக வழங்க கோரிக்கை
செராமிக் தொழிற்பேட்டையில் அகல் விளக்கு உற்பத்தி... பாதிப்பு; மூலப்பொருட்களை அரசே நேரடியாக வழங்க கோரிக்கை
ADDED : செப் 24, 2025 07:24 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி பாதித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விருத்தாசலம், ஜங்ஷன் சாலையில், கடந்த 1965ம் ஆண்டு 100 ஏக்கர் பரப்பளவில், செராமிக் தொழிற்பேட் டை துவங்கப்பட்டு, அகல் விளக்குகள், பீங்கான் பொம்மைகள், பியூஸ் கேரியர் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாராகி வருகின்றன.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, புதுச்சேரி உட்பட பிற மாநிலங்களுக்கும்; சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
இந்தோனேஷியா போன்ற நாடுகளில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு, களிமண் வட்டுகளும் தயாரித்து, அனுப்பி வைக்கப்படுகின்றன.
இங்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 5,000க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். பெரும்பாலும் உள்ளூர் மக்களை காட்டிலும் ஒடிசா, குஜராத், பீகார் போன்ற மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி, வேலை செய்கின்றனர்.
ஆனால், சமீபகாலமாக பீங்கான் பொருட்கள் தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்கள் சரிவர கிடைக்காத காரணத்தால் உற்பத்தி சரிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் நவராத்திரி, தீபாவளி பண்டிகை நாட்களில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் அதிகளவு ஏற்றுமதி நடந்தது.
இதன் காரணமாக பண்டிகை காலங்களில் 2 முதல் 5 கோடி வரை அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன.
இந்நிலையில், தற்போது, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை சீசனில் அகல் விளக்கு உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து செராமிக் உற்பத்தியாளர் ஆனந்தகோபால் கூறுகையில், 'கடந்த காலத்தை விட 60 சதவீதம் உற்பத்தி பாதித்துள்ளது. அகல் விளக்குகள் தயாரிப்புக்கு தேவையான வண்டல் மண் டன் 2,500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிலர் கள்ளச்சந்தையிலும் விற்பனை செய்கின்றனர்.
உற்பத்தி சீராக செய்ய சரியான உற்பத்தியாளர்களை அடையாளம் காண வேண்டும்.
அவர்களுக்கு அரசே மூலப்பொருட்களை வழங்க வேண்டும். விருத்தாசலத்தில் பிரதான தொழிலான செராமிக் தொழிற்பேட்டையை ஊக்குவிக்க ஆய்வகம் கட்டாயம் அமைக்க வேண்டும்.
இங்கு, பீங்கான் பொருட்களின் தரம், தொழில்நுட்பம் மூலம் வணிகத்தை மேம்படுத்த ஆய்வக நுட்ப உதவிகள் தேவைப்படுகிறது. மேலும், அரசால் மூலப்பொருட்கள் வழங்க வேண்டும் ' என்றார்.
துப்பாக்கி சுடுதலுக்கு
களிமண் வட்டுகள்
ஒலிம்பிக்கில் க்ளே பிஜீயன் ஷூட்டிங்' எனும் துப்பாக்கிசூடு போட்டி உள்ளது. அதிவேகமாக இலக்கை குறிவைத்து சுடும் போட்டி. வெளிநாடுகளில் இந்த விளையாட்டு பிரபலம். களிமண் வட்டுகளை மேலே பறக்கவிட்டு, அதனை சுட்டு வீழ்த்தும் விளையாட்டாகும்.
இதற்கு தேவையான களிமண் வட்டுகள், விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வட்டும் 105 கிராம் எடையில், ஆரஞ்சு மற்றும் கருப்பு கலந்த நிறங்களில் தயாரிக்கப்படுகிறது. சில நாடுகளில் வட்டின் பின்புறம் கலர் பவுடர் பேக் செய்திருக்கும். அது, துப்பாக்கியால் சுட்டதும் உடைந்து வண்ணமயமாக காட்சியளிக்கும்.