Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நகராட்சியாக தரம் உயர்ந்த அரூர் டவுன் பஞ்., : பொதுமக்கள் வரவேற்பு

நகராட்சியாக தரம் உயர்ந்த அரூர் டவுன் பஞ்., : பொதுமக்கள் வரவேற்பு

நகராட்சியாக தரம் உயர்ந்த அரூர் டவுன் பஞ்., : பொதுமக்கள் வரவேற்பு

நகராட்சியாக தரம் உயர்ந்த அரூர் டவுன் பஞ்., : பொதுமக்கள் வரவேற்பு

ADDED : ஜூலை 12, 2024 12:54 AM


Google News
அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தை பாளையம்புதுாரில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டியை இணைத்து, அரூர் டவுன் பஞ்., அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பால் பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை, மழை நீர் வடிகால், நடைபாதைகள், உயர்தர சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் நிதி அதிகரிப்பு போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறமிருக்கிறது. அதே நேரத்தில், டவுன் பஞ்.,ல் அரசு மானியமாக அளிக்கப்படும், நபார்டு நிதி, பசுமை வீடுகள், தனிநபர் கழிப்பறை, அனைவருக்கும் வீடு போன்ற திட்டங்களும், குளம், நீர்நிலைகள் மேம்பாடு உள்ளிட்ட சில குறிப்பிட்ட சலுகைகள் இழக்க வேண்டி வருமோ என்ற அச்சமும், பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி பஞ்.,களில் பல குடும்பங்கள் விவசாயத்தை சார்ந்துள்ளதால், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகள் மூலம் செய்யப்படும் நீர்வரத்து வாய்க்கால் துார்வாருதல், ஏரி மற்றும் நீர்நிலைகள் மேம்படுத்துதல் போன்ற வளர்ச்சி பணிகளில் பாதிப்பு ஏற்படுமோ என்ற சந்தேகம், அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. மேலும், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகள் டவுன் பஞ்.,ல் எளிதாக கிடைப்பது போன்ற நடைமுறை நகராட்சிகளில் இல்லை எனவும், கூடுதல் வரி கட்டணம் சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் எனவும், கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கா.சி.தமிழ்க்குமரன், அரூர்: அரூர் டவுன் பஞ்.,ஐ நகராட்சியாக தரம் உயர்த்தியது வரவேற்கதக்கது. அதே சமயம் நீண்ட காலத்திற்கே முன்பே, அரூரை நகராட்சியாக தரம் உயர்த்தி மேம்பாடு அடைய செய்திருக்க வேண்டும். அதன் மூலம், அரூர் நகரத்தின் கட்டமைப்பு உயர்ந்திருக்கும். வணிகம் மேம்பாடு அடைந்திருக்கும். இதைவிட சிறிய டவுன் பஞ்.,கள் எல்லாம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அரூர் தனி தொகுதி என்பதால், நீண்ட நாட்களாக அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. வெறும் அறிவிப்போடு இல்லாமல், விரைவாக எல்லைகள் வரையறுக்கப்பட்டு, வார்டு வரையறைகள் முடித்து, அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். புதிய நகராட்சிக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பி.வி.பொதிகைவேந்தன், தொட்டம்பட்டி: அரூரை நகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் அறிவித்ததை வரவேற்கிறோம். எங்கள் பஞ்., வளர்ச்சியடையும். நில மதிப்பீடு உயரும். போக்குவரத்து, சாலை, குடிநீர் மற்றும் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படும். மேலும் நிதியுதவி அதிகமாக கிடைக்கும். அடுக்குமாடிகள், வீடுகள், வணிக வளாகங்கள் அரூர் பகுதியில் அதிகளவில் உருவாகும். தொழில் வளர்ச்சி அடையும்.

கே.செந்தில்முருகன், சோரியம்பட்டி: அரூரை நகராட்சியாக தரம் உயர்த்தியதால் அரூர் நகரம் முன்னேற்றமடையும். நீண்ட நாட்களாக அரூர் டவுன் பஞ்.,யாக இருந்து விட்டு நகராட்சியாக வருவது பெரிய விஷயம். மோப்பிரிப்பட்டி பஞ்., வளர்ச்சியடையும். அரூர் நகரின் கட்டமைப்பு மேம்படும். குடிநீர், தரமான சாலை, பாதாள சாக்கடை, பூங்காக்கள் உள்பட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us