/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 3 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கற்கருவிகள் கண்டெடுப்பு 3 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கற்கருவிகள் கண்டெடுப்பு
3 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கற்கருவிகள் கண்டெடுப்பு
3 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கற்கருவிகள் கண்டெடுப்பு
3 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கற்கருவிகள் கண்டெடுப்பு
ADDED : செப் 13, 2025 02:20 AM

தர்மபுரி:சென்னை பல்கலை பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள், தர்மபுரி மாவட்ட மலைப் பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்ட போது, குட்லாம்பட்டி என்ற கிராமப் பகுதியில், 5,000 ஆண்டுகள் முதல், 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்த பழைய கற்காலம் மற்றும் நுண் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற் கருவிகளை கண்டெடுத்தனர்.
இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாணவர் திலகராஜன் கூறியதாவது:
குட்லாம்பட்டியில் விவசாய ம் நடக்காத பகுதியில் ஆய்வு செய்தபோது, 200க்கும் மேற்பட்ட கற்கருவிகள் கிடைத்தன. அவற்றை செய்த போது கழிக்கப்பட்ட செதில்களும் கிடைத்தன. இவை, பழைய கற்காலத்தைச் சேர்ந்தவையாகவும், நுண் கற்காலத்தைச் சேர்ந்தவையாகவும் உள்ளன.
இக்கருவிகள், இங்குள்ள மலைப் பகுதிகளின் கல் வகையைச் சேர்ந்த, 'குவார்ட்ஸ், கிரானைட், சார்னோகைட்' உள்ளிட்ட கனிமங்களாக உள்ளன.
பொதுவாக, பழைய கற்கால மனிதர்கள், கரடுமுரடான சற்றே பெரிய கற்கருவிகளை பயன்படுத்தினர். அந்த வகையில், இங்கு கைக்கோடரிகள், இருபுறம் செதுக்கிய வெட்டுக் கருவிகள், செதுக்கு கருவிகள், சுரண்டும் கருவிகள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டம், அத்திரம்பாக்கத்தில், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இடைப் பழங்கற்காலம்; 3.85 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ் பழங்கற்கால கருவிகள் கண்டறியப்பட்டன.
அந்த வரிசையில், இங்கு கிடைத்துள்ள பழங்கற்கால கருவிகள், 3.50 லட்சம் ஆண்டுகளாகவும்; நுண் கற்கால கருவிகள், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட் டவையாகவும் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.