Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விழிப்புணர்வு இல்லையே: நீர்நிலைகளில் குளிக்கும்போது அதிகரிக்கும் இறப்பு :அஜாக்கிரதையால் தொடரும் உயிரிழப்பால் பாதிப்பு

விழிப்புணர்வு இல்லையே: நீர்நிலைகளில் குளிக்கும்போது அதிகரிக்கும் இறப்பு :அஜாக்கிரதையால் தொடரும் உயிரிழப்பால் பாதிப்பு

விழிப்புணர்வு இல்லையே: நீர்நிலைகளில் குளிக்கும்போது அதிகரிக்கும் இறப்பு :அஜாக்கிரதையால் தொடரும் உயிரிழப்பால் பாதிப்பு

விழிப்புணர்வு இல்லையே: நீர்நிலைகளில் குளிக்கும்போது அதிகரிக்கும் இறப்பு :அஜாக்கிரதையால் தொடரும் உயிரிழப்பால் பாதிப்பு

ADDED : செப் 16, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு குளிக்க சென்று ஆர்வம் மிகுதியால் ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கி உயிரை விடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

மாவட்டத்தில் அணைகள், குளங்கள், கண்மாய்கள், தடுப்பணைகள், குட்டைகள் என நீர்நிலைகள் அதிகமாக உள்ளன. பருவமழை காலத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட தடுப்பணைகள் நிரம்புவது வழக்கம். நீர் வரத்து கால்வாய்களில் உள்ள செடிகள் ,மணல் ஆகியவற்றை அடித்து கொண்டு வருவதால் இவற்றில் ஆழம் குறைவாக இருந்தாலும் சகதியாக மாறி விட்டன. இவ்வாறு உள்ள நீர்த்தேக்கங்களில் குளிக்கும் போது சேற்றில் சிக்கி கொண்டால் வெளியே வருவது மிகவும் சிரமமான ஒன்றாகும். சிக்கி கொண்டவரை காப்பாற்ற சென்றவர்களும் சேற்றில் சிக்கி தங்களது உயிரை இழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. பள்ளி மாணவர்கள் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நீர்நிலைகளில் குதித்து விளையாட ஆரம்பித்து விடுகின்றனர். இவர்கள் ஆபத்தை உணராமல் நீர் நிலைகளில் நடுப்பகுதி வரை சென்று சுழல் ,சேற்றில் சிக்கி கொள்கின்றனர்.

வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அருவிகள், நீர்நிலைகளை தேடி சென்று குளித்து ஆபத்தில் சிக்கிகொள்வதும் அவ்வப்போது அரங்கேறுகிறது. நன்றாக நீச்சல் தெரிந்த நபர்கள் கூட சேற்றில் சிக்கி கொண்டால் வெளியே வருவது மிகவும் சிரமமான செயலாக உள்ளது. ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி தலையூற்று அருவியில் குளிக்க சென்று ஆர்வம் மிகுதியால் ஆழமான பகுதிக்கு சென்று சுழலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இதேபோல் மழைக்காலத்தில் கிணற்று மேட்டில் சென்று தண்ணீர் எவ்வளவு உள்ளது என எட்டிப் பார்த்து வழுக்கி உள்ளே விழுந்து இறந்தவர்களும் உண்டு. மழைக்காலத்தில் நீர்த்தகங்களில் குளிக்கும்போதும் கிணற்று பகுதிகளில் நடக்கும் போதும் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

........

அலட்சியம் வேண்டாமே

நீர்நிலைகள் என்றாலே எவ்வளவு ஆழம் ,அதில் உள்ளடங்கிய ஆபத்துக்கள் குறித்து மேலோட்டமான பார்வையில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீர்நிலைகளில் குளிக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது மிக அவசியமானது குறிப்பாக சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஆபத்தை உணராமல் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு நீர் நிலைகளில் விளையாடுவது அவர்கள் வாழ்க்கையையே இழக்க நேரிடுவதுடன் குடும்பத்தினருக்கும் மீளா துயரத்தை ஏற்படுத்ததும். தாங்கள் இல்லாத நிலையில் தங்கள் குடும்பத்தினர் படும் சிரமங்களை ஒரு வினாடி எண்ணி பார்க்க வேண்டும். நீர் நிலைகளில் கொடிய நீர்வாழ் உயிரினங்கள் ஏதேனும் இருப்பின் அதனாலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுகுறித்து சிறந்த முறையில் எடுத்து கூறி நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் நீர் நிலைகளில் விளையாடுவதை தவிர்த்து வேறு பயனுள்ள வகையில் தங்களது பொழுதை ஆனந்தமாக கழிக்க பழகி கொள்ள வேண்டும். ஆர்வம் மிகுதியால் ஆபத்தை தேடிக்கொள்ள கூடாது என்ற மன உறுதி உடன் செயல்பட வேண்டும். பெற்றோர் , பெரியோர்கள் அறிவுரையை கேட்டு நடப்பது சாலச்சிறந்தது.

- ஆர்.ரவிச்சந்திரன்,முன்னாள் கல்லுாரி முதல்வர், ஒட்டன்சத்திரம்.

...............

...





      Our Apps Available On




      Dinamalar

      Follow us