Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தியாகதுருகத்தில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனையால்... அதிருப்தி; கண்டுகொள்ளாத போலீசார் மீது மக்கள் கடும் கோபம்

தியாகதுருகத்தில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனையால்... அதிருப்தி; கண்டுகொள்ளாத போலீசார் மீது மக்கள் கடும் கோபம்

தியாகதுருகத்தில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனையால்... அதிருப்தி; கண்டுகொள்ளாத போலீசார் மீது மக்கள் கடும் கோபம்

தியாகதுருகத்தில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனையால்... அதிருப்தி; கண்டுகொள்ளாத போலீசார் மீது மக்கள் கடும் கோபம்

ADDED : செப் 25, 2025 04:36 AM


Google News
Latest Tamil News
தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் கஞ்சா விற்பனையின் முக்கிய சந்தையாக மாறி இளைஞர்கள் பலர் சீரழிந்து வருவதை கண்டுகொள்ளாத போலீசார் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் கொடி கட்டி பறக்கும் இடமாக தியாகதுருகம் மாறி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் கிராம் கணக்கில் பிடிபட்ட கஞ்சா, சமீப காலமாக இங்கு கிலோ கணக்கில் பதுக்கி வைத்து மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்தில் இருந்தே கஞ்சா வியாபாரிகளை வளர விட்டு கண்டு கொள்ளாமல் இருக்கும் போலீசாரின் அலட்சியமே என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 2022 ம் ஆண்டு நவ., மாதம் தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனை செய்த எறையூரை சேர்ந்த டேவிட் குமார், ரட்சகநாதன், ஆரோக்கியதாஸ், ராஜ் பெர்னாண்டஸ், செல்வமணி ஆகிய 5 பேரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதுவரை கிராம் கணக்கில் பிடிபட்டுக் கொண்டிருந்த கஞ்சா முதன்முறையாக கிலோ கணக்கில் பிடிபட்டது. அப்போதே போலீசார் உஷாராகி தியாகதுருகத்தில் கஞ்சா விற்பனை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும்.

இதன்பிறகு வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி பதுக்கி வைத்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு தியாகதுருகத்திலிருந்து சப்ளை செய்வது அதிகரித்தது.

கடந்த ஆண்டு டிச., 5 ம் தேதி தியாகதுருகம் பழனியப்பா தெருவை சேர்ந்த குமார், 41; வீட்டில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 2.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக குமார், ரவி, சீனிவாசன், வல்லரசு, முகமது ஷாகில் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 31ம் தேதி தியாகதுருகம் மலையம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் கஞ்சா விற்பனை செய்த தியாகதுருகத்தைச் சேர்ந்த அவினாஷ், புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பரத், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவா ஆகியோரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

அதன் எதிரொலியாக தியாகதுருகத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ருத்தீஷ், 27; என்ற இளைஞர் கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது இவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு தியாகதுருகத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தொடர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

இந்நிலையில் ஓடிசா மாநிலத்தில் இருந்து மினி லாரியில் தியாகதுருகத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 21.7 கிலோ கஞ்சா பண்டல்கள் கடந்த 22 ம் தேதி தியாகதுருகம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தியாகதுருகம் அடுத்த மாடூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித், அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் ஆத்துார் அடுத்த பழனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கண்ட சம்பவங்கள் கஞ்சா விற்பனையின் சந்தையாக தியாகதுருகம் மாறி வருவதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத அளவு தியாகதுருகத்தில் தொடர்ந்து அதிக அளவு கஞ்சா பிடிபடுவது வெளியில் இருந்து எடுத்து வரப்பட்டு பதுக்கி வைத்து, மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்படுவது தற்போது வெளியாகி உள்ளது.

கஞ்சா விற்பனை அதிகரிக்க இங்குள்ள ஒரு சில போலீசாரும் உடந்தையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டப்படுகிறனர்.

இதுவரை கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலானோர் இளைஞர்கள். இளைய தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தியாகதுருகம் போலீசாரை கூண்டோடு மாற்றி, பாரபட்சம் இன்றி செயல்படும் நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us