/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாத்தனுார் அணை நீர் இருப்பு 100 அடியை எட்டியது விவசாயிகள் மகிழ்ச்சி சாத்தனுார் அணை நீர் இருப்பு 100 அடியை எட்டியது விவசாயிகள் மகிழ்ச்சி
சாத்தனுார் அணை நீர் இருப்பு 100 அடியை எட்டியது விவசாயிகள் மகிழ்ச்சி
சாத்தனுார் அணை நீர் இருப்பு 100 அடியை எட்டியது விவசாயிகள் மகிழ்ச்சி
சாத்தனுார் அணை நீர் இருப்பு 100 அடியை எட்டியது விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 29, 2025 01:35 AM
திருக்கோவிலுார்: சாத்தனுார் அணையின் நீர் இருப்பு, 100 அடியை எட்டிய நிலையில், எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்ற சூழல் உருவாகி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலையில் உருவெடுத்து தமிழக எல்லையான கெலவரபள்ளி, கிருஷ்ணகிரி அணையை கடந்து சாத்தனுார் அணையை வந்தடைகிறது.
அங்கிருந்து ஆற்றில் பாய்ந்தோடி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களை வளமாக்கி வங்கக்கடலில் கலக்கிறது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடகா, நந்திதுர்கா மலைப்பகுதி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர், முழுவதும் தென்பெண்ணையில் பெருக்கெடுக்கும். கெலவரபள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் நிரம்பி வெளியேறும் உபரி நீர் சாத்தனுார் அணையை வந்தடையும் சூழலில், தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து விடும்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில் தான் சாத்தனுார் அணை திறக்கப்படும். இதே நிலைதான் கடத்தாண்டும் நீடித்தது. அதாவது கடந்தாண்டு, அக்டோபர், 17ம் தேதி தான் சாத்தனுார் அணை 100 அடியை எட்டியது.
ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழைக்கு முன்னரே, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழை தென்பெண்ணையில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கெலவரபள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் நிரம்பி, உபரி நீர் சாத்தனுார் அணையை வந்தடைந்து கொண்டிருக்கிறது.
இதன் மூலம், 119 அடி அதாவது 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட சாத்தனுார் அணையின் நீர் இருப்பு கடந்த, 24ம் தேதியே, 100 அடியை கடந்து விட்டது.
அங்கு நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி, 104.10 அடி, அதாவது 4,388 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,290 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் இருந்து எந்த நேரத்திலும் தென்பெண்ணையில் தண்ணீர் திறக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இது கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.