ADDED : ஜூலை 26, 2024 02:04 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சியில், 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியினரின் பிரதான சாலையாக உள்ள, வட்டம்பாக்கம், பனப்பாக்கம் சாலை வழியே, ஒரகடம், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
தவிர, உமையாள்பரணச்சேரி, காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு, வளையக்கரணை உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
தினசரி பள்ளி, கல்லுாரி,வேலைக்கு செல்லும் 5க்கும் மேற்பட்டகிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை முழுதும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறி போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வருகிறது.
இரவு நேரத்தில்செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், குண்டும் குழியுமாக சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாவதுடன், வாகன ஓட்டிகள் முதுகு வலியால் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால், இப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டு, தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதையடுத்து, மிக்ஜாம்புயல் சாலை சீரமைப்பு திட்டத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த மார்ச் மாதம் இந்த சாலை சீரமைப்பு பணிகள்துவங்கின.
இந்த நிலையில், ஐந்து மாதங்களாக சாலை பணி மந்தகதியில் நடக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன் தார் சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டன.
இதையடுத்து பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், ஜல்லிகள் கொட்டப்பட்ட சாலையில்செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
காலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர், பெண்கள், வயதானோர் மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.
எனவே, மந்தகதியில் நடக்கும் சாலை பணியினை விரைந்து முடித்து, தார் சாலையினை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்டஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.