Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/திருப்பம்! ஓட்டெடுப்புக்கு ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை: காஞ்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

திருப்பம்! ஓட்டெடுப்புக்கு ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை: காஞ்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

திருப்பம்! ஓட்டெடுப்புக்கு ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை: காஞ்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

திருப்பம்! ஓட்டெடுப்புக்கு ஒரு கவுன்சிலர் கூட வரவில்லை: காஞ்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

ADDED : ஜூலை 30, 2024 07:26 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது. மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க., -- பா.ஜ., - பா.ம.க., ஆகிய எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் உட்பட ஒருவர் கூட வரவில்லை. இதனால், தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனர் செந்தில்முருகன் அறிவித்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில், மொத்தம் உள்ள 51 வார்டுகளில் தி.மு.க., 33, அ.தி.மு.க., - 9, பா.ம.க., - 2, காங்., - 1, பா.ஜ., - 1, சுயேச்சைகள் - 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி மேயராகவும், கூட்டணியில் இருந்த காங்., கட்சியைச் சேர்ந்த, 22வது வார்டு கவுன்சிலர் குமரகுருநாதன் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜ், தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளராக பதவி வகிக்கிறார். இதனால், காஞ்சி மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் பணிகளில் ஒரு தரப்பினருக்கே ஆதாயம் கிடைத்து வருவதாக, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர்.

இதனால், மேயர் மற்றும் அவரது கணவருக்கு எதிராக, தி.மு.க.,வின் அதிருப்தி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்று, மேயர் மற்றும் அவரது கணவர் மீது புகார் மனுவும் கொடுத்தனர். ஆனால், அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவராக யுவராஜ் கருதப்படுவதாகவும், அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க மேலிட நிர்வாகிகள் தயங்குவதாகவும், அதிருப்தியாளர்கள் கொதிப்படைந்தனர்.

இதைத் தொடர்ந்து தி.மு.க., அதிருப்தி அணியினருடன், எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் கைகோர்த்து, மேயருக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் சிலர், நிலைக்குழு உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர்.

சமரச முயற்சி


இந்நிலையில், மேயரை எப்படியும் பதவியில் இருந்து அகற்ற வேண்டுமென, மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில் தி.மு.க., அதிருப்தியாளர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகவுன்சிலர்கள் உட்பட 33 பேரும், நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி, கமிஷனர் செந்தில்முருகனிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து, ஜூலை 29ல் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடத்தப்படும் என, மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

மேயருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே சமரச முயற்சியை கட்சி மேலிடம் மேற்கொண்டது. அதிருப்தி கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி மேலிட நிர்வாகிகள் தீவிரம் காட்டினர்.

அதிருப்தி தி.மு.க., கவுன்சிலர்களை அழைத்து, அமைச்சர் நேரு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலர் சுந்தர் ஆகியோர் பல சுற்று பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.

இறுதிக்கட்டமாக, கட்சியின் அமைப்பு செயலர் அன்பகம் கலை, சமீபத்தில் கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தினார். கவுன்சிலர்களை சமாதானம் செய்ததோடு, கடும் நடவடிக்கைகளுக்கு தயாராகும் படி அதிருப்தியாளர்களை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், தி.மு.க., தலைமை கண்டிப்பின்படி, அக்கட்சியின் கவுன்சிலர்கள் 33 பேரும் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என, கருதப்பட்டது.

இழுபறி நீடித்த நிலையில், திடீரென தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும், தங்கள் குடும்பத்தோடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.

சந்தேகம்


மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில், ஐந்தில் நான்கு பங்கினர் என, 41 கவுன்சிலர்கள் பங்கேற்று ஓட்டளித்தால் மட்டுமே, மேயர் பதவியில் இருந்து அவரை நீக்க முடியும்.

இதனால், மேயர் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு கூட்டத்தில், எதிரான தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தின் மாடியில், நேற்று காலை 10:00 மணிக்கு, கமிஷனர் செந்தில்முருகன் தலைமையில் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் துவங்கியது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூட்ட அரங்கில், காலை 10:00 மணி முதல் கமிஷனர் தனது இருக்கையில் அமர்ந்து காத்திருந்தார். ஓட்டுச்சீட்டு, ஓட்டுப்பெட்டி, வருகை பதிவேடு, வீடியோ எடுக்க கேமராமேன் என, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், அதிர்ச்சி திருப்பமாக, தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள், எதிர்க்கட்சியினர், மேயர் ஆதரவு கவுன்சிலர் என, ஒருவர் கூட கூட்டத்திற்கு வரவில்லை.

இரண்டு மணி நேரத்திற்கு பின், 12:00 மணிக்கு, மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறவில்லை என அறிவித்து, கமிஷனர் செந்தில்முருகன் வெளியேறினார்.

இதற்கிடையே, 34வது வார்டின் தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர் பிரவீன்குமார் மட்டும் திடீரென கூட்ட அரங்கிற்கு வந்தார்.

அப்போது, 'மேயர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கமிஷனர் முன்னுக்கு பின் முரணான பதில் அளிக்கிறார்' என, மனு எழுதி, அதை கமிஷனரிடம் அளித்தார்.

ஆனால், கூட்டத்தின் பதிவேட்டில் கையெழுத்திட்டால் மட்டுமே மனு பெறப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மனுவை கமிஷனரின் மேஜையில் வைத்து விட்டு, பிரவீன் குமார் சென்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் தோல்வி அடைந்ததால், மேயர் பதவியில் மகாலட்சுமி தொடர்கிறார். உள்ளாட்சி விதிகளின் படி, அடுத்த ஓராண்டுக்கு மேயர் மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடத்த முடியாது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது மேயர் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், அடுத்த சில நாட்களில் நடைபெறவுள்ள மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற குறைந்தபட்சம் 17 கவுன்சிலர்கள் போதும் என்பதால், அவர்களை தொடர்ந்து தங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ள மேயர் தரப்பு தயாராகி வருகிறது.

சென்னையில், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளேன். மாநகராட்சி கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் சென்றிருக்க வேண்டும். நான், நேரில் வந்து இதுபற்றி பேசுகிறேன்.

-பா.கணேசன்,

அமைப்பு செயலர், அ.தி.மு.க.,

தலைமை அறிவிப்புக்கு ஏற்ப, நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் வரவில்லை. அதே நிலைப்பாடுடன், மாமன்ற கூட்டத்திலும், கவுன்சிலர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மூ.மகாலட்சுமி,

மேயர், காஞ்சிபுரம் மாநகராட்சி.

எதிர்க்கட்சிகள் கூண்டோடு 'ஆப்சென்ட்!'

தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்களுடன், அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., கவுன்சிலர்களும் கைகோர்த்ததை அடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி வட்டாரத்தில் அரசியல் பரபரப்பு நீடித்தது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த எதிர்க்கட்சிகள் முனைந்துள்ளதாக கருதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இரு தரப்பினரும் சுயேச்சைகளிடம் பேச்சு நடத்தினர். ஆனால், நேற்று நடந்த கூட்டத்திற்கு, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக 'ஆப்சென்ட்' ஆனது, வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சுயேச்சைகளை வளைப்பதில் ஆளும் தரப்பு வெற்றி பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சியினரையும் முடக்கியது எப்படி என, பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us