/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பெரும்பாக்கம், பாலுார் தடுப்பணைகள்... இழுத்தடிப்பு! : அரசு நிதி ஒதுக்காததால் விவசாயிகள் கவலைபெரும்பாக்கம், பாலுார் தடுப்பணைகள்... இழுத்தடிப்பு! : அரசு நிதி ஒதுக்காததால் விவசாயிகள் கவலை
பெரும்பாக்கம், பாலுார் தடுப்பணைகள்... இழுத்தடிப்பு! : அரசு நிதி ஒதுக்காததால் விவசாயிகள் கவலை
பெரும்பாக்கம், பாலுார் தடுப்பணைகள்... இழுத்தடிப்பு! : அரசு நிதி ஒதுக்காததால் விவசாயிகள் கவலை
பெரும்பாக்கம், பாலுார் தடுப்பணைகள்... இழுத்தடிப்பு! : அரசு நிதி ஒதுக்காததால் விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 30, 2024 11:52 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாற்றில், பழையசீவரம் பகுதியில் மட்டுமே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ள நிலையில், பெரும்பாக்கம், பாலுார் ஆகிய இடங்களில், புதிய தடுப்பணைகளுக்கு அரசு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்து வருவதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வழியாக பாயும் பாலாற்றை நம்பி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். பாலாற்றில் வரும் வெள்ள நீரை மடைமாற்றி, ஒவ்வொரு ஆண்டும் பல ஏரிகள் நிரப்பப்படுகின்றன.
வடகிழக்கு பருவமழையின் போது, ஒவ்வொரு ஆண்டும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக உள்ள இந்த பாலாற்றில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பணை கட்டக்கோரி, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஒவ்வொரு பருவ மழைக்கும், நுாற்றுக்கணக்கான டி.எம்.சி., தண்ணீர், பாலாற்று நீர் வீணாக கடலில் கலந்ததே தவிர, ஏரிகளை நிரப்பவோ அல்லது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த எந்த தடுப்பணையும் கடந்த காலங்களில் கட்டப்படவில்லை.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, பாலாற்றில் ஏழு தடுப்பணைகள் கட்டப்படும் என, 2017ல் சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஈசூர்- - வள்ளிபுரம் இடையே 28 கோடி ரூபாயிலும், வாயலுாரில் 30 கோடியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழையசீவரத்தில் 32 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி தடுப்பணைகள் கட்டப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பழையசீவரம் பகுதியில் மட்டும் ஒரே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பாலுார், பெரும்பாக்கம் ஆகிய இடங்களிலும், தடுப்பணை எப்போது கட்டப்படும் என, விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
தி.மு.க., ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய தடுப்பணைகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.
தமிழக சட்டசபையில், நீர்வளத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்புகளை விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் உற்றுக் கவனிக்கின்றனர். அவ்வாறு, கடந்த இரு ஆண்டுகளாக எதிர்பார்த்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாலாற்றில் கட்ட வேண்டிய தடுப்பணைகள் குறித்து, அறிவிப்பு ஏதும் வெளியிடாததால், விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றமடைகின்றனர்.
ஆனால், திருப்பத்துார், வேலுார் ஆகிய மாவட்டங்களுக்கு, நீர்வளத்துறை பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மானிய கோரிக்கை அறிவிப்புகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், செம்பரம்பாக்கம் ஏரி சீரமைப்புக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் வஞ்சிக்கப்படுவதாகவும், விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரும்பாக்கம், பாலுார் என இரு இடங்களில், ஒரு இடத்திலாவது தடுப்பணைக்கான நிதியை, நீர்வளத்துறை வழங்கும் என, விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத்துறை சார்பில், ஏற்கனவே கருத்துருக்கள் அனுப்பப்பட்டு விட்டன.
பாலுார், பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உதயம்பாக்கம், வெங்குடி போன்ற இடங்களிலும், தடுப்பணை கட்ட நிதி கேட்டுள்ளோம். அரசு தான் முடிவு செய்ய வேண்டும். நிதி ஒதுக்கிய உடன் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- நீர்வளத்துறை அதிகாரி,
காஞ்சிபுரம் மாவட்டம்.