/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் நித்யபூஜை நடத்த பக்தர்கள் வலியுறுத்தல் செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் நித்யபூஜை நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் நித்யபூஜை நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் நித்யபூஜை நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் நித்யபூஜை நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 13, 2025 12:58 AM

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் செவிலிமேட்டில் உள்ள ராமானுஜர் சன்னிதி, காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. மாதந்தோறும் நடைபெறும் திருவாதிரை திருமஞ்சனத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வரதராஜ பெருமாள் கோவில் சார்பில், மாதந்தோறும் திருவாதிரை திருமஞ்சனம் மற்றும் சனிக்கிழமையில் மட்டுமே, இக்கோவிலில் நித்ய பூஜை நடத்தப்படுகிறது.
பிற நாட்களில் ராமானுஜருக்கு பூஜை இல்லாமல் உள்ளது. சன்னிதியும் பூட்டியே உள்ளதால், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
எனவே, செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் தினமும் நித்யபூஜை நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பணி துவக்குவது எப்போது
பல்வேறு சிறப்பு பெற்ற ராமானுஜர் சன்னிதி சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இந்த சன்னிதியை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, இக்கோவிலை புதுப்பிக்க ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த ஆண்டு டிச., மாதம் அறநிலையத் துறை உதவி பொறியாளர், ராமானுஜர் சன்னிதி சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்தார். திருப்பணிக்கான மதிப்பீடு செய்ய கோவில் முழுதும் அளவீடு செய்தார். ஆறு மாதமாகியும் திருப்பணி துவக்கப்படாமல் உள்ளது.
இதனால், கோவில் சுவரில் அரச மர செடிகள் வளர்ந்துள்ளதால், நாளடைவில், கட்டடம் முற்றிலும் வலுவிழக்கும் நிலை உள்ளது.
எனவே, செவிலிமேடு ராமானுஜர் சன்னிதி சீரமைக்கும் திருப்பணியை விரைந்து துவக்க, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வரதராஜ பெருமாள் கோவில் செயல் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி கூறியதாவது:
செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் தினமும் நித்ய பூஜை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், திருப்பணிக்கான மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.