Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அரசு பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியத்தால் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணியர் அவதி

அரசு பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியத்தால் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணியர் அவதி

அரசு பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியத்தால் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணியர் அவதி

அரசு பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியத்தால் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணியர் அவதி

ADDED : மார் 18, 2025 08:30 PM


Google News
காஞ்சிபுரம்:விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில், காஞ்சிபுரம் மண்டலத்தின் கீழ் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு சாதாரணப் பேருந்து மற்றும் விரைவுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், காஞ்சிபுரம் - அரக்கோணம் வழியாக திருப்பதி வரையில், அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

காஞ்சிபுரத்தில் இருந்து, திருப்பதி செல்லும் பேருந்துகள் வெள்ளைகேட், பள்ளூர், சேந்தமங்கலம், தக்கோலம் கூட்டு சாலை, தக்கோலம் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்கின்றன.

அதேபோல, திருப்பதியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் பேருந்துகளும் மேற்கண்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நிற்கின்றன. நிறுத்தங்களை ஒட்டி இருக்கும் பிற நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை.

குறிப்பாக, திருப்பதியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் பேருந்துகள் தக்கோலம் கூட்டு சாலை நிறுத்தத்தில் அறவே நிறுத்துவதில்லை. அதேபோல, பள்ளூர் அடுத்த கம்மவார்பாளையம் நிறுத்தத்திலும் அரசு பேருந்துகள் நிறுத்துவதில்லை.

ஓட்டுனர்களும் எங்களுக்கு நிர்ணயம் செய்த ஸ்டேஜில் மட்டுமே பேருந்துகளை நிறுத்துவோம். நிறுத்தம் இல்லாத இடங்களில், நாங்கள் ஏன் பேருந்து நிறுத்த வேண்டும் என, கூறுகின்றனர்.

தனியார் பேருந்துகள் சிறிய பேருந்து நிறுத்தங்களில் குறைந்த எண்ணிக்கை பயணியர் இருந்தால், நின்று செல்லும் போது, அரசு பேருந்துகளுக்கு மட்டும் ஏன் நிறுத்தி வருவாய் பெருக்கக்கூடாது என, கிராமப்புற பயணியர் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் பயணியரின் எண்ணிக்கை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, விழுப்புரம் கோட்ட போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பயணியர் அதிகமாக இருக்கும் நிறுத்தங்களில், அரசு பேருந்துகள் நின்று செல்ல ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இதை கடைபிடிக்காத ஓட்டுனர்கள் மீது துறை ரீதியாக விளக்கம் கேட்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us