Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ துாய்மை பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தால் திணறல்

துாய்மை பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தால் திணறல்

துாய்மை பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தால் திணறல்

துாய்மை பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தால் திணறல்

ADDED : மே 13, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
வாலாஜாபாத் :சுகாதாரம் மற்றும் துாய்மையை பாதுகாக்கும் வகையில், ஊராட்சிகள் தோறும் துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதாவது, ஊராட்சிக்கு ஒரு துாய்மை காவலரும், 150 குடும்பங்களுக்கு ஒரு துாய்மை பணியாளர் என, அந்தந்த ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடுகள் தோறும் சேகரித்து வைத்துள்ள குப்பை கழிவை, இப்பணியாளர்கள் பெற்று, அவைகளை ஊராட்சியின் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று அங்கு, மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரிக்கப்படுகிறது.

அவ்வாறு பிரித்தெடுக்கும் குப்பையில், மட்கும் வகையிலான குப்பையை உரக்குழியில் போட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.

மட்காத குப்பை கழிவை ஒன்றிய அளவிலாக செயல்படும் நெகிழ் அரைக்கும் கூடங்களுக்கு துாய்மை வாகனம் வாயிலாக அனுப்பி வைக்கின்றனர்.

அங்கு, மட்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை அரைத்தெடுத்து, தார் உற்பத்தி போன்றவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறான ஊராட்சி துப்புரவு பணிகளில் ஈடுபடும் துாய்மை காவலருக்கு மாத ஊதியமாக 9,000 ரூபாய், ஊராட்சி நிர்வாகத்தால் ஊராட்சி வங்கி கணக்கில் இருந்து வழங்கப்படுகிறது.

துாய்மை பணியாளர்களுக்கு, மாத தொகுப்பூதியமாக 5,000 ரூபாய் ஊராட்சி நிர்வாக கணக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, வறுமை ஒழிப்பு சங்கம் வாயிலாக வழங்கப்படுகிறது.

இத்தொகை போதுமானதாக இல்லை எனவும், குறைந்த அளவிலான இத்தொகையை கொண்டு குடும்ப செலவுகளை சமாளிக்க முடியவில்லை என, துாய்மை பணியாளர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து, வாலாஜாபாத் ஒன்றியத்தில் அடங்கிய துாய்மை பணியாளர்கள் சிலர் கூறியதாவது:

துாய்மை பணியாளர்கள் பகுதி நேர பணியாளர்களாக கருதப்படுகிறன்றனர். இதனால், குறைந்தபட்ச ஊதியம் நிலை தொடர்கிறது. ஆனால், நாங்கள் காலையில் பணிக்கு வந்து, வீடுகள் தோறும் குப்பை சேகரித்து, அவைகளை குப்பை கிடங்கு பகுதிக்கு கொண்டு சென்று சேர்க்க மதியம் வரை நேரம் செலவாகிறது.

அதற்கு மேல் வீட்டுக்கு சென்று, ஊதியம் பெறும் வகையிலான எந்த பணியும் மேற்கொள்ள முடிவதில்லை.

மாத ஊதியமாக 5,000 ரூபாயை பெற்று, இன்றைய விலைவாசி உயர்வு காலகட்டத்தில் குடும்பத்தை நகர்த்துவது கடினமாக உள்ளது.

எனவே, கிராம ஊராட்சிகளில் பணி செய்யும் துாய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க, ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us