Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரூ.14 கோடி வாடகை பாக்கிக்கு அவகாசம் முடிந்தது சிக்கலில் மாட்டிய கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள்

ரூ.14 கோடி வாடகை பாக்கிக்கு அவகாசம் முடிந்தது சிக்கலில் மாட்டிய கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள்

ரூ.14 கோடி வாடகை பாக்கிக்கு அவகாசம் முடிந்தது சிக்கலில் மாட்டிய கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள்

ரூ.14 கோடி வாடகை பாக்கிக்கு அவகாசம் முடிந்தது சிக்கலில் மாட்டிய கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள்

ADDED : ஜூன் 28, 2024 01:57 AM


Google News
கரூர், கரூர் மாநகராட்சியில், 14 கோடி ரூபாய் நிலுவை தொகைக்கு மூன்று மாதங்கள் அவகாசம் முடிந்த நிலையில், கடைக்காரர்கள் பாக்கி செலுத்தாத நிலையில், கவுன்சிலர்கள் சட்டப்படியான சிக்கலில் சிக்கி உள்ளனர்.

கரூர் மாநகராட்சி கமிஷனராக சரவணகுமார் இருந்த போது, கடந்தாண்டு அக்.,ல், மாநகராட்சி கூட்டத்தில், 352 கடைகளில் குத்தகைதாரர், 14 கோடி ரூபாய் வாடகை நிலுவை உள்ளது. மூன்று மாதத்திற்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளின் குத்தகை ரத்து செய்து, பொது ஏலம் விடலாம் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின், கமிஷனர் சரவணகுமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய கமிஷனராக சுதா நியமனம் செய்யப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பின், டிச., 28ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், 352 கடைகள் குத்தகை பாக்கியை செலுத்த மூன்று மாதம் (மார்ச் 31 வரை ) கால அவகாசம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் கொடுத்தும், இதுவரை நிலுவை தொகை செலுத்தவில்லை என்பதால், என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி வருவாய் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:

பல ஆண்டுகளாக, 352 கடைகளும் வாடகை நிலுவை வைத்துள்ளது. இவர்களுக்கு பல வாய்ப்பு வழங்கப்பட்ட போதும், வாடகை செலுத்த மறுத்து வருகின்றனர். கமிஷனர் சரவணகுமார் வந்த பின், சீல் வைப்பு, குத்தகை ரத்து தீர்மானம் போன்ற நடவடிக்கையால் வசூலாக தொடங்கியது. கமிஷனர் மாற்றப்பட்ட நிலையில், குறிப்பிட்ட சில கவுன்சிலர்களின் நலனுக்காக, வாடகை பாக்கி செலுத்த மூன்று மாத அவகாசம் என்ற தீர்மானம் வைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி சட்டத்தின், 492வது பிரிவின்படி மாநகராட்சி சொத்து மற்றும் நிதி இழப்பு ஏற்படும் வகையில் கமிஷனர், கவுன்சிலர்கள் செயல்பாடுகள் இருந்தால், அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். இதை ஈடு செய்யும் வகையில், அவர்களிடம் வசூல் செய்ய அல்லது சொத்துக்களை கையகப்படுத்த சட்டத்தில் வழிவகை உண்டு. இந்த சட்ட சிக்கலை உணராமல், கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மூன்று மாத அவகாசம் கடந்த நிலையில், 30 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகம் முன், அதிக பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர் விபரத்தை பிளக்ஸ் பேனரில் வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. நிலுவை தொகை வசூல் செய்யவில்லை என்றால், தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த கவுன்சிலர்கள், எப்போது வேண்டுமானாலும் சட்டப்படியான சிக்கலை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us