/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை
50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை
50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை
50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை
ADDED : ஜூன் 10, 2024 02:33 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட உள்ளதாக, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி, பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து, மண்ணில் மடக்கி உழுவதன் மூலம், காரீப் பருவ பயிர்களுக்கு தேவையான இயற்கை உரம் எளிதில் கிடைப்பதுடன், மண் வளமும் பாதுகாக்கப்படும். பசுந்தாள் உர உபயோகத்தை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு முதல்வரின், 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' திட்டத்தில், பசுந்தாள் உர உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்த சத்துக்களை அதிகம் உறிஞ்சும் பயிர்களை சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே செல்கிறது.
அத்துடன், உற்பத்தியை அதிகரிக்க, அதிகளவில் ரசாயன உரங்கள், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதால், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் எண்ணிக்கை குறைந்து, மண் வளம், நலம் குன்றி, அதிகளவில் களர் உவர் அமில நிலங்களாக மாறியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 3,000 ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட
திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம், பசுந்தாள் உர விதைகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. அனைத்து விவசாயிகள், குத்தகைதாரர்கள், இத்திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள். ஒரு பயனாளி அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ வரை மானியமாக பசுந்தாள் உர விதைகளை பெற முடியும். விவசாயிகள் நேரடியாக, உழவன் செயலியில் பதிவு செய்யலாம். மேலும், வட்டாரங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.